வீண் விளம்பரத்திற்காக செய்கிறார்கள்.. பாக். வீரர்கள் மீது கவாஸ்கர் புகார்.. ஐபிஎல் மாற்றிவிட்டது !
மும்பை : இந்திய வீரர்கள் குறித்து தேவையற்ற விமர்சனங்களை பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் செய்வதற்கு இந்திய கிரிக்கெட் அணி ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் ஐபிஎல் தொடர் வீரர்களுக்கு இடையிலான நெருக்கத்தை அதிகரித்து விட்டதாக பாராட்டியுள்ளார்.
அந்த கட்டுரையில் தரவரிசை பட்டியலில் டாப் இரண்டு இடத்தில் இருக்கும் அணிகள் விளையாடும் போது பல்வேறு மோதல்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் ஐபிஎல் தொடருக்கு பிறகு வீரர்களுக்கு இடையே உள்ள விரிசல் குறைந்து விட்டது.

ஐபிஎல் மாற்றிவிட்டது
எனினும் போட்டியில் ஆக்ரோஷம் குறையவில்லை என்றாலும், மோதல்கள் முன்பு போல் இல்லை. இதற்கு காரணம் ஐபிஎல் தொடரில் விளையாடும் போது அனைத்து வீரர்களும் ஒரே ஹோட்டலில் தங்கி ஒன்றாக பயணம் செய்து ஆறு வாரம் ஒரே அணியாக இருப்பதால் வீரர்கள் ஒருவர் பற்றி ஒருவர் தெரிந்து கொண்டார்கள். வீரர்களின் கலாச்சாரம் என்ன அவர்கள் விளையாட்டை எப்படி பார்க்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டார்கள். முன்பெல்லாம் வீரர்கள் விளையாடும் போது அடிக்கடி பிரச்சினை ஏற்படும். பல கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி திட்டிக் கொள்வார்கள்.

பொறாமை
இப்போதும் அது நடைபெறுகிறது. ஆனால் ஐபிஎல் தொடரில் பங்கேற்காத வீரர்கள் தான் இதனை செய்கிறார்கள். ஐபிஎல் தொடரில் விளையாட முடியாத சிலர் நாம் இந்திய வீரர்களை விட நிறைய சாதித்தும் அவர்களுக்கு பணம் கிடைக்கிறது நமக்கு கிடைக்கவில்லையே என்று பொறாமைப்படுகிறார்கள். இப்போது ஆன்லைன் மீடியாக்கள் அதிகரித்துவிட்டது. இணையதளத்தில் பல தரப்பினரும் கிரிக்கெட்டை பற்றி குறிப்பாக இந்திய வீரர்கள் பற்றி படிக்க தொடங்கி விட்டார்கள். இந்திய வீரர்கள் பற்றி தவறாக இருந்தாலும் அதனை விருப்பமாக படிக்கிறார்கள்.

வீண் விளம்பரம்
இதனை பயன்படுத்திக் கொண்டு முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் இந்திய வீரர்கள் பற்றி தேவையில்லாத கருத்துக்களை கூறி வருகிறார்கள். அதனை நமது நாட்டு ஊடகமும் செய்தியாக வெளியிடுகிறார்கள். சிலர் இந்திய வீரர்களை விட பாகிஸ்தான் வீரர்கள் சிறந்தவர்கள் என்று கூறுகிறார்கள். உடனே நமது நாட்டு ரசிகர்கள் அதற்கு பதிலடி கொடுத்து தங்களுடைய விருப்பமான வீரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். இப்படி செய்வதன் மூலம் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் தங்களுடைய ஆன்லைன் பலத்தை அதிகரித்துக் கொள்கிறார்கள். இது வீண் விளம்பரத்திற்காக செய்யப்படும் யுக்தி.

கண்டுகொண்டதே இல்லை
முந்தைய காலத்தில் எல்லாம் பாகிஸ்தான் வீரர்கள் இந்திய வீரர்கள் பற்றி தேவையில்லாத கருத்தை கூறவே மாட்டார்கள். பாகிஸ்தான் வீரர்கள் பற்றி தேவையில்லாத கருத்தை இந்திய வீரர்கள் கூறி நீங்கள் பார்த்திருக்கிறீர்களா. கண்டிப்பாக இருக்காது. ஏனென்றால் நாங்கள் அதைப் பற்றி எல்லாம் கண்டுகொள்ளவே நேரமில்லை. இதுதான் எங்களுடைய ஸ்டைல். பாகிஸ்தான் வீரர்கள் பேசுவதை செய்தியாக வெளியிடுவதை நிறுத்தி விட்டாலே அவர்கள் நமது இந்திய வீரர்கள் குறித்து எந்த கருத்தையும் சொல்ல மாட்டார்கள் என கவாஸ்கர் கூறியுள்ளார். பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் தொடர்ந்து கோலி, ரோகித்தை பாபர் அசாமுடனும், பும்ராவை ஷாகின் ஆப்ரிடியுடன் ஓப்பிட்டு பேசி வந்த நிலையில் கவாஸ்கர் இந்த பதிலடியை தந்துள்ளார்.


Click it and Unblock the Notifications