லண்டன்: எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவிடம் ஏற்பட்ட படுதோல்விக்குப் பிறகு, இங்கிலாந்து டெஸ்ட் அணியை முன்னாள் இங்கிலாந்து கேப்டன் ஜெஃப்ரி பாய்காட் கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பாக, தொடக்க ஆட்டக்காரர் ஜாக் க்ராவ்லி மற்றும் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் ஆகியோரை அவர் தனிப்பட்ட முறையில் கடுமையாகச் சாடினார்.
டெய்லி டெலிகிராப்பில் எழுதிய தனது கட்டுரையில், க்ராவ்லியின் தொடர்ச்சியான தோல்விகள் மீதும், வோக்ஸ் தொடர்ந்து அணியில் இருப்பதன் மீதும் அவர் பெரும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

க்ராவ்லி தனது ஆட்டத்தை மாற்றவோ அல்லது மேம்படுத்தவோ முடியாது. அவரது மூளையில் அது வேரூன்றி விட்டது என்று பாய்காட் விமர்சனம் செய்துள்ளார். "பேட்டிங் என்பது மனதில் உள்ளது. மூளைதான் நீங்கள் எப்படி பேட்டிங்கை அணுக வேண்டும் என்பதை முடிவு செய்கிறது: எந்த ஷாட்களை விளையாட வேண்டும், எந்தப் பந்துகளை விட வேண்டும். அவரது நுட்பக் குறைபாடுகளும் சிந்தனையும் ஆழமாக வேரூன்றி இருக்கின்றன," என்று பாய்காட் கூறி உள்ளார்.
"ஒரு புலி அதன் புள்ளிகளை மாற்றாது, அல்லது ஜாக் தனது பேட்டிங்கை மாற்ற விரும்பவில்லை. அவர் தற்சமயம் தனது சிறந்த ஆண்டுகளை நெருங்கி இருக்க வேண்டும். ஆனால் 56 டெஸ்ட் போட்டிகளில் அவர் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. ஒரு பிரகாசமான இன்னிங்ஸ் ஆடினால், எண்ணற்ற தோல்விகள் ஏற்படுகிறது. அதுவும் 31 என்ற பேட்டிங் சராசரியுடன், இது போதாது," என்று பாய்காட் குறிப்பிட்டார்.
முதல் டெஸ்டில் (ஹெட்டிங்லே) க்ராவ்லி முன்னேற்றத்தின் சில அறிகுறிகளைக் காட்டினார். ஆனால், ஒரு வாரம் கழித்து பர்மிங்காமில் அவரது தடுமாற்றம் பாய்காட்டை வியக்க வைத்தது. எட்ஜ்பாஸ்டனில் அவர் ஆட்டமிழந்த இரண்டு ஷாட்களும் மோசமானவை என்று பாய்காட் கூறினார்.
வோக்ஸ் மீதும் பாய்காட் இதேபோல் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். 36 வயதான வோக்ஸ்-இடம் இருந்து இங்கிலாந்து அணி விலக வேண்டும் என்று அவர் கூறி உள்ளார். "காலாவதியான அல்லது போதுமான பங்களிப்பை வழங்காத வீரர்களை அணியில் வைத்திருப்பது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். கிறிஸ் வோக்ஸைப் பாருங்கள். ஒரு வேகப்பந்து வீச்சாளர் வயதாகும்போது அவரது வேகம் குறையும். வெளிநாடுகளில் அவர் ஒருபோதும் விக்கெட்டுகளை வீழ்த்தியதில்லை, அங்கு அவரது சாதனை மோசமாக உள்ளது," என்று பாய்காட் சுட்டிக் காட்டினார்.
பாய்காட் இவ்வாறு கூறினாலும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் கிராவ்லி மற்றும் வோக்ஸ் ஆகிய இருவரும் பிளேயிங் லெவனில் இடம்பெற்று உள்ளனர்.