AUS vs AFG: அள்ளிப்போட்டு கொண்டு வந்துருக்காங்க.. இத்தனை சாதனைகளா.. மேக்ஸ்வெல் ஆடிய ருத்ரதாண்டவம்!
மும்பை: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் விளாசி ஒற்றை ஆளாக ஆஸ்திரேலியா அணிக்கு வெற்றியை தேடி கொடுத்த கிளென் மேக்ஸ்வெல் படைத்துள்ள சாதனைகள் பட்டியலை பார்க்கலாம்.
உலகக்கோப்பை தொடரின் 39வது போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடுகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி ஜத்ரானின் அபார சதம் காரணமாக 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 291 ரன்களை விளாசியது. சிறப்பாக ஆடிய ஜத்ரான் 129 ரன்களும், ரஷித் கான் 18 பந்துகளில் 35 ரன்களும் சேர்த்து அசத்தினர்.

இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 91 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலையில் இருந்தது. அதன்பின் மேக்ஸ்வெல் - கம்மின்ஸ் இருவரும் விக்கெட்டை கொடுக்காமல் ஆடினார். சிறப்பாக ஆடிய மேக்ஸ்வெல், கால்களில் தசைபிடிப்பு ஏற்பட்டதால் கால்களை நகர்த்தாமல் விளையாடி இரட்டை சதம் விளாசி ஆஸ்திரேலியாவுக்கு வெற்றியை தேடி கொடுத்தார்.
ஒருநாள் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த இன்னிங்ஸை ஆடிய மேக்ஸ்வெல் 128 பந்துகளில் 10 சிக்ஸ், 21 பவுண்டரி உட்பட 201 ரன்களை விளாசி கடைசி வரை களத்தில் இருந்தார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி சார்பாக முதல்முறையாக இரட்டை சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் மேக்ஸ்வெல். இதற்கு முன்பாக ஷேன் வாட்சனின் 185 ரன்கள் தான் ஆஸ்திரேலியா வீரரால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும்.
அதேபோல் 201 ரன்களை விளாசியதன் மூலமாக சேஸிங்கில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோரை மேக்ஸ்வெல் விளாசியுள்ளார். இதற்கு முன்பாக பாகிஸ்தான் அணியின் ஜமான் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 193 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அதேபோல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் மேக்ஸ்வெல் - கம்மின்ஸ் இணைந்து எடுத்த 202 ரன்கள் பார்ட்னர்ஷிப் தான், 7வது விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும்.
அதேபோல் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடக்க வீரர் அல்லாமல் களமிறங்கிய வீரர்களால் விளாசப்பட்ட அதிகபட்ச ரன்களில் மேக்ஸ்வெல் முதலிடம் பிடித்துள்ளார். முன்பாக ஜிம்பாப்வே அணியின் சார்லஸ் கவெண்ட்ரி 194 ரன்கள் சேர்த்ததே சாதனையாக இருந்தது. அதேபோல் தொடக்க வீரர் அல்லாமல் இரட்டை சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை மேக்ஸ்வெல் படைத்துள்ளார். அதேபோல் இரட்டை சதம் விளாசிய வீரர்களில் 2வது அதிவேக இரட்டை சதத்தை விளாசி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை தொடரில் கெய்க், கப்தில் ஆகியோருக்கு பின் இரட்டை சதம் விளாசிய 3வது வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications