மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 91 ரன்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் இருந்து 292 ரன்கள் எட்டி அபார வெற்றி பெற்றிருக்கிறது.
இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனை அடுத்து களமிறங்கிய ரஹமதுல்லா குர்பாஸ் 21 ரன்களும், ரஹ்மத்ஷா 30 ரன்கள் எடுக்க கடைசிவரை ஆட்டமிழக்காமல் விளையாடிய இப்ராஹிம் 129 ரன்கள் சேர்த்தார். இறுதியில் ரஷித் கான் தன்னுடைய பங்கிற்கு 18 பந்துகளில் 35 ரன்கள் சேர்க்க ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 291 சேர்த்தது. இதனை அடுத்து 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.
அந்த அணியில் தொடக்க வீரர் டிராவிஸ் ஹேட் டக் அவுட்டாக, மார்ஸ் 24 ரன்களிலும் ,டேவிட் வார்னர் 18 ரன்களிலும் ஜோஸ் இங்கிலீஷ் டக்அவுட் ஆகியும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 49 ரன்கள் சேர்ப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மார்னஸ் லாபஸ்சேன் 14 ரன்களில் வெளியேறினார். மார்க்கஸ் ஸ்டோனிஸ் ஆறு ரன்களிலும் மிட்செல் ஸ்டார்க் மூன்று ரன்களிலும் அடுத்தடுத்து பெவிலியன் திரும்ப ஆஸ்திரேலியா அணி 91 ரன்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அப்போது களத்தில் நின்ற மேக்ஸ்வெல் கொடுத்த ஒரு எளிமையான கேட்ச் வாய்ப்பை ஆப்கானிஸ்தான் வீரர் முஜிபுர் ரஹ்மான் தவற விட்டார். இதனை பயன்படுத்திக் கொண்ட மேக்ஸ்வெல் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.இது என்னுடைய நாள், நான் களத்தில் இருக்கும் வரை தோல்வியை ஒப்புக்கொள்ள மாட்டேன் என்ற பாணியில் மேக்ஸ்வெல் பட்டையை கிளப்பினார்.
மேக்ஸ்வெலை ஆட்டமிழக்க ஆப்கானிஸ்தான் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. ஒரு கட்டத்தில் சிக்ஸர்கள் பவுண்டரிகள் என பறக்கவிட்ட மேக்ஸ்வெல் தனி ஆளாக நின்று 128 பந்துகளில் 21 ரன்கள் விளாசினார். இதில் 21 பவுண்டரிகளும்,10 இமாலயா சிக்ஸர்களும் அடங்கும். இதனால் ஆஸ்திரேலிய அணி 46.5 ஓவர் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 293 எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. உலகக்கோப்பை வரலாற்றில் சேசிங்கில் தனி நபர் அதிகபட்ச ஸ்கோர் அடித்தது இதுவே அதிகமாகும். மேலும் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியா வீரர் அடித்த தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.