ராஜ்கோட் : ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் நீண்ட நாட்களுக்கு பின் அணிக்கு திரும்பி இருக்கிறார்.
உலகக்கோப்பை தொடரில் ஆட உள்ள அவர் அதற்கு முன்னதாக இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்றார். அவரது ஃபார்ம் எப்படி இருக்கப் போகிறது என அறிய பலரும் ஆவலாக இருந்தனர்.

கிளென் மேக்ஸ்வெல் ஸ்பின் பந்து வீசும் ஆல் - ரவுண்டர் என்பதால் இந்திய சூழ்நிலைகளில் அவர் ஆட்டம் சிறப்பாக இருக்கும் என்று கருதியே கடந்த சில மாதங்களாக கிரிக்கெட் ஆடாமல் இருக்கும் அவருக்கு உலகக்கோப்பை அணியில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஐபிஎல் அனுபவமும் அதிகம். இதனாலேயே இவர் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
அவரது மனைவி வினி ராமனின் குடும்பம் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டது. அதை வைத்து நம் தளத்திலேயே நண்பர் ஒருவர் ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த "தமிழ்நாட்டு மருமகன்" அணிக்கு திரும்பப் போகிறார். இந்திய அணிக்கு இனிமேல் தான் கச்சேரி என்கிற ரீதியில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார்.
ஆனால், கச்சேரியும் இல்லை, ஒண்ணும் இல்லை, கிளம்புங்க என அவரை பேட்டிங் ஆட வந்த உடன் அனுப்பி வைத்தார் பும்ரா. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் டேவிட் வார்னர் 56, மிட்செல் மார்ஷ் 96, ஸ்டீவ் ஸ்மித் 74, மார்னஸ் லாபுஷேன் 72 ரன்கள் குவித்தனர்.

அவர்கள் ஆட்டமிழந்த பின் வந்த நம் தமிழ்நாட்டு மருமகன் மேக்ஸ்வெல் 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், பும்ரா வீசிய யார்க்கர் பந்தை அடிக்க முடியாமல் தடுமாறி பவுல்டு அவுட் ஆனார். அவருக்குத் தான் கடைசியில் கச்சேரி நடந்தது.
எனினும், மற்ற வீரர்கள் ரன் குவிப்பில் ஈடுபட்டதால் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் குவித்தது. இந்திய அணிக்கு சவாலான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
பேட்டிங்கில் சறுக்கினாலும் நம் தமிழ்நாட்டு மருமகன் பந்துவீச்சில் தான் வீசிய முதல் ஓவரில் 2 ரன்கள் மட்டுமே கொடுத்து தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் விக்கெட்டை எடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு நம்பிக்கை கொடுத்தார்.