ராஜ்காட் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரர் ரோகித் சர்மா சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மேக்ஸ்வெல் அபார கேட்சால் ஆட்டம் இழந்தார்.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி ஐம்பது ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக தொடக்க வீரர் மிச்செல் மார்ஸ் 96 ரன்கள் சேர்த்தார். இதனை அடுத்து 353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மாவுடன் வாஷிங்டன் சுந்தர் தொடக்க வீரராக களம் இறங்கினார்.

இதில் வாஷிங்டன் சுந்தர் பொறுமையாக விளையாடி 30 பந்துகளில் 18 ரன்கள் தான் சேர்த்தார். ஆனால் மறுமுனையில் நின்ற ரோகித் சர்மா தன்னுடைய வழக்கமான அதிரடியை காட்டினார். வீசிய பந்துகளை எல்லாம் சிக்ஸர்களுக்கு தூக்கி சுற்றிய ரோகித் சர்மா 57 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்தார். இதில் ஐந்து பவுண்டரிகளும் ஆறு சிக்சர்களும், 142 என்ற அளவில் ஸ்ட்ரைக் ரேட் இருந்தது. இதனால் ரோகித் சர்மா சதம் விளாசுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ஆட்டத்தின் 20.6 வது ஓவரில் ஒரு டிவிஸ்ட் ஏற்பட்டது.
அதாவது மேக்ஸ்வெல் வீசிய பந்தை ரோகித் சர்மா பளார் என அடித்தார் இந்த பந்து நேரடியாக மேக்ஸ்வெலின் முகத்தை காலி செய்திருக்கும். நல்ல வேளையாக மேக்ஸ்வெல் எதிர்ச்சியாக கையை வைக்க பந்து அவர் கையிலே வந்து விழுந்தது. இன்னும் சொல்லப்போனால் 0.45 வினாடிகளில் பந்து பறந்து வர அதனை மேக்ஸ்வெல் பிடித்து அசத்தியிருக்கிறார்.
இந்த கேட்சை பிடித்தவுடன் உண்மையிலேயே நான் இந்த கேட்சை பிடித்து விட்டேனா என்பது போல் ரியாக்ஷன் காட்டினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இன்றைய ஆட்டத்தில் மேக்ஸ்வெல் பேட்டிங்கில் சொதப்பினாலும் பந்துவீச்சில் 10 ஓவர்களில் 40 ரன்கள் விட்டு கொடுத்து நான்கு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.