நடராஜன் ஆடிய 3 மேட்ச்கள்.. ஆடிப்போன ஆஸி. ஜாம்பவான்.. இப்படி சொல்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை
சிட்னி: இந்திய அணியில் இடம்பிடித்து இருக்கும் தமிழக வீரர் நடராஜனை உலக கிரிக்கெட் ஜாம்பவான்கள் எல்லோரும் பாராட்ட தொடங்கியுள்ளனர்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த தமிழக வீரர் நடராஜன் தற்போது உலகம் முழுக்க பிரபலமாகி வருகிறார். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணியில் அறிமுகமான இவர்..பெரிய அளவில் கவனம் ஈர்க்கத் தொடங்கி உள்ளார்.
அறிமுக ஒருநாள் போட்டியில் 2 விக்கெட் எடுத்து அசத்தினார். அதன்பின் முதல் டி 20 போட்டியில் 3 விக்கெட், கடைசியாக நடந்த டி 20 போட்டியில் 2 விக்கெட் என்று பெரிய அளவில் நடராஜன் கவனம் ஈர்த்து இருக்கிறார்.

எப்படி
தொடக்க காலத்தில் பும்ரா இருந்தது போல இப்போது நடராஜன் இருக்கிறார். இந்திய அணி பும்ரா இல்லாமல் அவ்வளவு எளிதாக வென்றது கிடையாது. ஆனால் அப்படிப்பட்ட பும்ராவிற்கே ஓய்வு கொடுத்துவிட்டு நடராஜனை இறக்கும் அளவிற்கு பும்ரா மீது கோலி நம்பிக்கை வைத்துள்ளார்.

ஐபிஎல்
நடராஜன் இப்போது மட்டுமில்லை கடந்த ஐபிஎல் தொடரில் இருந்தே மிகவும் சிறப்பாக ஆடி வருகிறார். ஹைதராபாத் அணிக்காக ஐபிஎல் போட்டியில் ஆடிய இவர் அதிக எண்ணிக்கையில் யார்க்கர் வீசி அசத்தினார். அதேபோல் தோனி, கோலி, ஏபிடி, ரசல் என்று முக்கியமான வீரர்களின் விக்கெட்டுகளை எல்லாம் வீழ்த்தினார்.

பாராட்டு
நடராஜனின் பவுலிங்கை அப்போதே ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் பிரிட்லி பாராட்டி இருந்தார். டெத் ஓவர்களில் இப்படித்தான் பவுலிங் செய்ய வேண்டும். நடராஜன் சிறப்பாக பவுலிங் செய்து யார்க்கர் போட்டு எதிர் நாட்டு வீரர்களை கட்டுப்படுத்துகிறார் என்று கூறி இருந்தார். இந்த நிலையில் இன்னொரு ஜாம்பவான் தற்போது நடராஜனை பாராட்டி உள்ளார்.

மெக்ராத்
ஆஸ்திரேலிய ஜாம்பவான் பவுலர் மெக்ராத் நடராஜனை பாராட்டி உள்ளார். அதில், நடராஜன் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். அவரின் பவுலிங் ஆச்சர்யம் அளிக்கிறது. ஆஸ்திரேலிய தொடரில் இந்தியா கண்டுபிடித்த பொக்கிஷம்தான் நடராஜன். அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி மெருகேற்ற வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார்.

நடராஜன் டெஸ்ட்
ஆஸ்திரேலியாவின் இரண்டு பெரிய ஜாம்பவான்கள் நடராஜனை பாராட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. நடராஜன் இப்படி உலக அளவில் பாராட்டப்படுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. இதன் காரணமாக நடராஜன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விரைவில் நடராஜன் டெஸ்ட் அணியிலும் அறிமுகம் ஆக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications