கராச்சி: பாகிஸ்தான் அணியின் கேப்டன் ரிஸ்வானின் விக்கெட்டை வீழ்த்தியது ஆட்டத்தை திருப்பிவிட்டதாக நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்சல் சான்ட்னர் தெரிவித்துள்ளார். ரிஸ்வானின் விக்கெட்டை வீழ்த்த கிளென் பிலிப்ஸ் பிடித்த கேட்ச் அற்புதமாக இருந்ததாக கூறிய அவர், பேட்டிங்கில் தாங்கள் நினைத்ததை விடவும் 60 ரன்கள் அதிகமாக குவித்ததாக தெரிவித்திருக்கிறார்.
ஐசிசி தொடரில் என்றாலே நியூசிலாந்து அணி குறைந்தபட்சம் அரையிறுதி சுற்றுக்காவது முன்னேறிவிடும். இதுவரை நடந்த ஐசிசி தொடர்களில் அதிகளவில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய அணிகளில் நியூசிலாந்து அணியும் ஒன்று. அந்த வகையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தி இருக்கிறது.

இந்த போட்டியில் வென்றதன் மூலமாக அடுத்த 2 போட்டிகளில் ஒன்றில் வென்றால் கூட நியூசிலாந்து அணியால் எளிதாக அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும். சொந்த மண்ணில் ஆடிய பாகிஸ்தான் அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி தங்களின் ஃபார்மையும், வலிமையையும் நிரூபித்து காட்டி இருக்கிறது. இதனால் புள்ளிப் பட்டியலிலும் சிறந்த நெட் ரன் ரேட் உடன் நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது.
இந்த வெற்றிக்கு பின் நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்சல் சான்ட்னர் பேசுகையில், இந்தப் போட்டியில் அடைந்த வெற்றி நிச்சயம் நிறைவாக இருக்கிறது. பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பாக பவுலிங் செய்தார்கள். ஆனால் லேதம் மற்றும் யங் இருவரும் அமைத்த பார்ட்னர்ஷிப் மிகச்சிறந்த ஒன்றாக அமைந்துவிட்டது.; சரியான நேரங்களில் பவுண்டரியை அடித்தனர்.
கடைசி நேரத்தில் களமிறங்கிய பிலிப்ஸ் அடித்து நொறுக்கிவிட்டார். நாங்கள் 260 ரன்களை சுற்றி இலக்கு நிர்ணயிப்போம் என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால் டெத் ஓவர்களில் நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் அதிக ரன்கள் வந்தது. அவ்வளவு பெரிய இலக்கை நிர்ணயித்த பின், முதல் 10 ஓவர்கள் பவுலிங் எங்களின் கட்டுபாட்டுக்குள் இருந்தது. அங்கிருந்து ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்து ரன் ரேட் அழுத்தத்தை அதிகரித்தோம்.
ரிஸ்வானுக்கு எதிராக பிலிப்ஸ் பிடித்த கேட்ச் அற்புதமானது. ஏனென்றால் ரிஸ்வானின் விக்கெட் மிகவும் முக்கியம். முத்தரப்பு தொடரில் ஆடியதன் மூலமாக பாகிஸ்தான் அணியையும், இங்குள்ள் பிட்சின் சூழலையும் நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது. வேகப்பந்துவீச்சாளர்கள் ஷார்ட் லெந்திலும், ஸ்பின்னர்கள் ஸ்லோவாக பவுலிங் செய்தால், இந்த பிட்சில் நன்றாக எடுபடும். பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி பவுலிங்கில் கொஞ்சம் அழுத்தம் கொடுத்தாலே வெற்றி பெற முடியும் என்று தெரிவித்துள்ளார்.