நல்ல கேப்டனில்லை... தேவையில்லாமல் டெண்டுல்கரை வம்புக்கிழுத்து பேசிய கோவா முதல்வர்
பனாஜி: உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டியை காண்பதற்காக கோவா மாநிலத்தை சேர்ந்த 3 அமைச்சர்கள் மற்றும் 6 எம்.எல்.ஏ.க்கள் பிரேசில் செல்ல உள்ளனர். இதற்காக அம்மாநில அரசு அவர்களது பயண செலவுகளுக்காக 89 லட்சம் ரூபாய் அனுமதித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் இதை நியாயப்படுத்திப் பேசியுள்ளதோடு ஓய்வு பெற்று விட்ட சச்சின் டெண்டுல்கரையும் தேவையில்லாமல் வம்புக்கிழுத்து பதிலளித்துள்ளார் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர்.

உலகக் கோப்பை கால்பந்து போட்டி....
32 நாடுகளின் தேசிய அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் தொடங்கியுள்ளது. ஒரு மாத காலம் போட்டிகள் நடைபெறவுள்ளன.

கோவா அரசியல்வாதிகள்...
இந்நிலையில், காலிறுதி மற்றும் அரை இறுதிப் போட்டிகளைக் காண்பதற்கு கோவா மாநில அரசு, கோவா மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் தவாத்கர், மீன்வளத் துறை அமைச்சர் அவர்ட்டானோ ஃபர்டோ, மின்துறை அமைச்சர் மிலிந்த் நாயக் மற்றும் 6 எம்.எல்.ஏ.க்களை பிரேசிலுக்கு அனுப்புகிறது. அனைவருமே ஆளுங்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள்.

அரசு செலவில்....
இவர்களுக்கு அனுமதியை வழங்கி உள்ள முதல்வர் மனோகர் பாரிக்கர், இவர்களது பயண செலவுகளுக்காக அரசு பணம் ரூ. 89 லட்சத்தையும் அனுமதித்துள்ளார்.

பொதுமக்கள் பணம் வீண்...
இப்படி மக்கள் பணத்தில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உலக கோப்பை கால்பந்தாட்டை போட்டியை காண்பதற்காக பிரேசில் செல்வது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக கோவா மாநில அரசை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சி, பொதுமக்கள் பணம் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் இந்த பயணத் திட்டத்தை அரசு நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.

ஆராய்ச்சிப் பயணம்...
ஆனால் கோவா அரசு தரப்பிலோ, இந்த பயணம் நியாயமானதே என்றும், இது உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டி குறித்து அறிந்துகொள்வதற்காக மேற்கொள்ளப்படும் ஒரு ஆராய்ச்சி பயணம் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கண்ணோட்டம்...
மேலும், அதிகாரிகள் யாரும் செல்லவில்லை என்றும், அரசியல்வாதிகள் மட்டுமே போட்டி குறித்து ஆராய்ந்து தங்களது கண்ணோட்டத்தை அரசுக்கு தெரிவிப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

நல்ல கேப்டனில்லை...
அத்தோடு நிற்கவில்லை பாரிக்கர். சச்சினையும் வம்புக்கிழுத்துள்ளார். அவர் கூறுகையில், சச்சின் டெண்டுல்கர் நல்ல வீரராக இருக்கலாம். ஆனால் நல்ல கேப்டனாக முடியாது. அவரைப் போன்றவர்களால் போட்டிகளை நடத்த முடியாது. அதேபோலத்தான் அரசியல்வாதிகளை அனுப்பினால்தான் அவர்கள் போய் விளையாட்டுப் போட்டி குறித்து அறிந்து வருவார்கள். இங்கு சர்வதேச போட்டிகள் நடைபெறும்போது அதை சரியான முறையில் அவர்கள் நடத்த முடியும்.

இது தான் காரணம்...
மாறாக வீரர்களையும், பயிற்சியாளர்களையும் அனுப்பினால் அவர்களால் சர்வதேச போட்டிகளை திறம்பட நடத்தும் அறிவு கிடைக்காது. எனவேதான் அரசியல்வாதிகளை மட்டுமே அனுப்ப முடிவெடுத்தோம் என்றார்.

கால்பந்து ரசிகர்கள்...
கோவா மாநிலம் சுற்றுலாவுக்கு மட்டுமல்லாது, கால்பந்துக்கும் பெயர் போனதாகும். இந்தியாவின் கால்பந்து ரசிகர்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் மேற்கு வங்கம், கேரளா ஆகியவற்றின் வரிசையில் கோவாவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications