மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக விளங்குபவர் விராட் கோலி. ஒரு காலத்தில் இந்திய அணியின் ரன் மிஷின் என்று ரசிகர்களால் விராட் கோலி அழைக்கப்படுவார்.
டெஸ்ட் ,ஒரு நாள் மற்றும் டி20 என அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் விராட் கோலி ரன்களை குவித்து வந்தார். ஏறுமுகமாக இருந்த விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கை கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் வரை சரிவை சந்தித்தது.

இந்த காலகட்டத்தில் விராட் கோலி ஒரு முறை கூட சதம் அடிக்கவில்லை. ஆனால் அதன் பிறகு ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் விராட் கோலி சதம் அடித்து தன்னுடைய பழைய பார்மை மீட்டார். அதேபோன்று ஒரு நாள் கிரிக்கெட்டிலும் அடுத்தடுத்து சதம் அடித்த விராட் கோலி தன்னுடைய திறமையை நிரூபித்தார். எனினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி தன்னுடைய பழைய ஆட்டத்தை கண்டுபிடிக்க முடியாமல் தடுமாறி வருகிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பார்டர் கவாஸ்கர் தொடரில் இரட்டை சதத்தை நெருங்கினாலும், அந்த ஒரு இன்னிங்ஸ் தவிர மற்ற அனைத்திலும் விராட் கோலி சொற்ப ரன்களில் வெளியேறினார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் விராட் கோலி ஆட்டம் ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்தது. ஒரு நாள் கிரிக்கெட்,டி20 கிரிக்கெட், டெஸ்ட் கிரிக்கெட் என அனைத்திலும் 50 க்கு மேல் சராசரி வைத்திருக்கும் வீரராக திகழ்ந்த விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறியதால் அவருடைய சராசரி 50க்கு கீழ் சென்றது.
தற்போது அவருடைய சராசரி 48.72 என்ற அளவில் இருக்கிறது. அதுவும் கடந்த இரண்டு ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் சராசரி வெறும் 32.13 என்ற அளவிலே இருக்கிறது. இந்த நிலையில் விராட் கோலி இழந்த பெருமையை மீட்க தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நல்ல வாய்ப்பாக கிடைத்திருக்கிறது. இங்கு இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விராட் கோலி விளையாட உள்ளார்.
இதில் நான்கு இன்னிங்ஸில் விராட் கோலி மொத்தமாக 421 ரன்கள் குறைந்தபட்சமாக அடித்தால் அவர் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய சராசரியை 50 என்ற அளவில் கொண்டு செல்லலாம். விராட் கோலி டெஸ்டில் 28 சதங்கள் அடித்து இருக்கிறார். இன்னும் இரண்டு சதங்கள் அடித்தால் அவர் டான் பிராட்மேனின் சாதனையையும் முறியடித்து விடலாம். இதனால் வெஸ்ட் இண்டீஸ் தொடர் விராட் கோலிக்கு புதிய திருப்பத்தை கொடுக்குமா? இல்லை முடிவுரையை எழுதுமா என்பதை ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.