Graham Thorpe - இங்கிலாந்து கிரிக்கெட் வீரரின் மரணத்தில் திருப்பம்.. மனைவி வெளியிட்ட பரபரப்பு தகவல்
லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் கிரகம் தார்பே கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி காலமானார். 55 வயதான கிரகாம் தார்பே இங்கிலாந்து அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6744 ரன்கள் அடித்திருக்கிறார்.
இதேபோன்று இங்கிலாந்து அணிக்காக 82 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 2350 ரன்கள் அடித்துள்ளார். இங்கிலாந்துக்காக இரண்டு உலகக் கோப்பையில் விளையாடி உள்ள கிரகாம் தார்பே பிற்காலத்தில் அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளராக பணியாற்றினார்.

இந்த நிலையில் கிரஹாம் தார்பேவுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதிலிருந்து பெரிய அளவில் வெளியே வராத கிரகம் தார்பே, கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி காலமானதாக செய்திகள் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
கிரஹாம் தார்பேக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு இருக்கலாம் என்று பலரும் எண்ணிய நிலையில் தற்போது அவருடைய மனைவி அதிர்ச்சிகர தகவல் ஒன்றை தெரிவித்திருக்கிறார். இது குறித்து பேசிய மனைவி அமான்டா, கிரஹாம் தார்பேவுக்கு இரண்டு அழகான குழந்தைகள், மனைவி என அவரை விரும்பக்கூடிய நல்ல வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டிருந்தார்.
ஆனால் திடீரென்று அவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. மன அழுத்தம், பதற்றம் என கிரகாம் தார்ப்பே தன் வாழ்க்கையில் வாழ முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டார். அவரை மீட்டுக் கொண்டு வந்து விடலாம் என்று நாங்கள் எவ்வளவோ போராடினோம். ஆனால் தீவிர மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த கிரகாம் தார்பே தன்னுடைய உயிரை தானே மாய்த்து கொண்டார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் மன உளைச்சல் பிரச்சனைக்காக கிரகம் தார்பே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சிகிச்சையில் ஆரம்பத்தில் நல்ல பலன் கிடைத்தது. ஆனால் மீண்டும் அவர் பழைய நிலைக்கு சென்று விட்டார். ஒரு குடும்பமாக நாங்கள் அவருக்கு துணையாக நின்றோம். ஆனால் எதுவுமே கை கொடுக்கவில்லை.
கிரிக்கெட் விளையாடும் போது மனதளவில் பலமான வீரராக கிரகாம் தார்பே இருந்தார். அவருக்கு உடல் அளவிலும் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் மனநலம் பாதிக்கப்பட்டால் அது பல விளைவுகளை உருவாக்கும். கிரஹாம் தார்பேவின் வாழ்க்கை அப்படித்தான் ஆனது. எனவே மன அழுத்தத்தை யாரும் சாதாரணமாக எண்ணிவிட வேண்டாம்.
அது யாரை வேண்டுமானாலும் பாதிக்கும் என்று கிரஹாம் தார்பே மனைவி தெரிவித்துள்ளார். கிரகாம் தார்ப்பே மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டார் என்று கூற நாங்கள் வெட்கப்படவில்லை. இது போல் இனி யாரும் உயிரிழக்க கூடாது என்பதற்காக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புகிறோம் என்று கிரகாம் தார்பேவின் மகள் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications