அகமதாபாத் : உலகின் மிகப்பெரிய பணக்கார கிரிக்கெட் அமைப்பு என்றால் அது பிசிசிஐ தான். இதைப் போன்று உலகிலே இரண்டாவது மதிப்பு மிக்க விளையாட்டு தொடர் என்றால் அது ஐபிஎல் தொடர்ந்தான். அத்தனை கோடிகள் இந்த ஐபிஎல் போட்டிகளில் புரள்கிறது.
இந்த நிலையில் மழை பெய்தால் மைதானத்தை முழுமையாக மூடும் தார்ப்பாய் கூட பிசிசிஐயிடம் இல்லாதது தான் தற்போது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலிய போன்ற நாடுகளில் கூட மேற்கூரைகள் மூடப்பட்ட கிரிக்கெட் மைதானங்கள் இருக்கிறது.

ஆனால் இந்தியாவில் இவ்வளவு காசு இருந்தும் ஒரு மைதானம் கூட அப்படி அமைக்கப்பட்டது இல்லை என்பது தான் சோகமான விஷயம். சரி கிரிக்கெட் உள்விளையாட்டு அரங்கில் ஆடக்கூடிய போட்டி கிடையாது என்று அதைக் கூட மன்னித்து விடலாம். ஆனால் மழை பெய்தால் தண்ணீரை வெளியேற்ற கூட சிறப்பான வசதி இல்லை என்றால் என்ன செய்வது.
தற்போது இறுதி ஆட்டத்தில் மழை குறுக்கிட்டு நின்றுவிட்டது ஆனால் போட்டிக்கு பயன்படுத்தப்படும் பிச்சுக்கு அருகில் உள்ள ஆடுகளத்தில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனை சரிப்படுத்த போதிய கருவி கூட இல்லை என்பது தான் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்போது அந்த இடத்தை சரி செய்வதற்காக பஞ்சை வைத்து தண்ணீரை உறிஞ்சும் வேளையில் மைதான ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இத்தனை கோடி சொத்து மதிப்பு உள்ள பிசிசிஐ ஆண்டுக்கு பல்லாயிரம் கோடி வருமானத்தை ஈட்டும் நிலையில் தண்ணீரை உறிஞ்சுவதற்கான சிறப்பு தொழில்நுட்பத்தை கூட பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். தற்போது அந்த ஒரு இடத்தில் தண்ணீர் தேங்கி இருப்பதால் ஒட்டுமொத்த போட்டியும் தடைப்பட்டு நிற்கிறது குறிப்பிடத்தக்கது.