அகமதாபாத் : 2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் அதிரடி ஆட்டம் ஆடி சதம் அடித்தார்.
இந்தப் போட்டியில் அபாரமாக ஆடி சிஎஸ்கே பந்துவீச்சாளர்களை பதம் பார்த்த அவர் 51 பந்துகளில் சதம் நடந்தார். அதன் மூலம் ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய மைல்கல் சாதனையும் படைக்கப்பட்டது.

இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்கள் சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் அதிரடி துவக்கம் அளித்தனர்.
அவர்கள் இருவரும் 17.2 ஓவர் வரை விக்கெட்டை இழக்காமல் ஆடினர். அவர்கள் இருவரும் அடுத்தடுத்து சதம் கடந்து சிஎஸ்கே அணியை திணற வைத்தனர். அவர்கள் முதல் விக்கெட்டுக்கு 210 ரன்கள் சேர்த்து சிஎஸ்கே அணியை மிரள வைத்தனர். இவர்கள் இருவரில் சுப்மன் கில் முதலில் சதம் அடித்தார். அவர் 51 பந்துகளில் சதம் கடந்தார். அதன் பின் 55 பந்துகளில் 104 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். அவர் 9 ஃபோர் மற்றும் 6 சிக்ஸர்களை அடித்து இருந்தார்.
இது அவரது நான்காவது ஐபிஎல் சதமாகும். அதுவும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காகவே அவர் நான்கு சதங்களையும் அடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சதம் ஐபிஎல் தொடரின் நூறாவது சதமாகும். இந்த மாபெரும் சரித்திர சாதனை சுப்மன் கில் அடித்த சதம் மூலம் படைக்கப்பட்டு இருக்கிறது.
2008 ஆம் ஆண்டு துவங்கிய ஐபிஎல் தொடர், 17 ஆண்டுகளில் 100 சதம் என்ற மைல்கல்லை எட்டி உள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சுப்மன் கில் அடித்தது 13வது சதம் ஆகும். அதன் பின் சாய் சுதர்சன் சதம் அடித்தார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் எடுத்தது. சாய் சுதர்சன் 103, சுப்மன் கில் 104 ரன்கள் எடுத்திருந்தனர்.