GT vs CSK: சாய் சுதர்சன் மெகா சாதனை.. சேவாக்கின் 14 ஆண்டுகால சாதனையைச் சமன் செய்து சரித்திரம்
அகமதாபாத்: 2026 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தமிழக வீரர் சாய் சுதர்சன், ரன் வேட்டையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளார். அகமதாபாத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், அவர் படைத்த ஒரு வரலாற்றுச் சாதனை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலியைப் பின்னுக்குத் தள்ளியுள்ளதுடன், வீரேந்தர் சேவாக்கின் மெகா சாதனையையும் சமன் செய்துள்ளது.
டி20 கிரிக்கெட்டில் அதிரடி ஆட்டம் ஒருபுறம் இருந்தாலும், ஒரு வீரரின் 'கன்சிஸ்டன்சி' எனப்படும் நிலைத்தன்மைக்குச் சான்றாகச் சாய் சுதர்சன் உருவெடுத்துள்ளார். சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் வெறும் 35 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், இந்த சீசனில் தனது 5-வது தொடர்ச்சியான அரைசதத்தைப் பதிவு செய்தார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் தொடர்ச்சியாக 5 அரைசதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற வீரேந்தர் சேவாக்கின் (2012) சாதனையைச் சாய் சுதர்சன் சமன் செய்துள்ளார்.

கோலியை முந்திய வேகம்
இந்தச் சீசனில் பஞ்சாப் அணிக்கு எதிராக 57, ராஜஸ்தானுக்கு எதிராக 55, ஹைதராபாத்துக்கு எதிராக 61, கொல்கத்தாவுக்கு எதிராக 53 என ரன் குவித்த அவர், தற்போது சிஎஸ்கே-வுக்கு எதிராக 84 ரன்கள் விளாசி இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இந்த ரன் குவிப்பின் மூலம் தொடர்ச்சியான அரைசதங்கள் வரிசையில் அவர் விராட் கோலியை முந்திச் சென்றுள்ளார். சர்வதேச அளவில் ஜோஸ் பட்லர் (2018) மற்றும் டேவிட் வார்னர் (2019) ஆகியோருக்குப் பிறகு இந்தச் சாதனையைச் செய்த வீரராகச் சாய் சுதர்சன் மாறியுள்ளார்.
இந்தப் போட்டியில் 84 ரன்கள் குவித்ததன் மூலம், இந்த சீசனில் சாய் சுதர்சன் 600 ரன்களைக் கடந்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் 600 ரன்களுக்கு மேல் அவர் எடுப்பது இது 2-வது முறையாகும். கடந்த 2025 சீசனில் 759 ரன்கள் குவித்து 'ஆரஞ்சு தொப்பி'யை வென்ற அவர், தற்போது மீண்டும் அந்தத் தொப்பியைத் தனது சக வீரர் சுப்மன் கில்லிடமிருந்து தட்டிப் பறித்துள்ளார்.
அகமதாபாத் மைதானத்தில் சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 125 ரன்கள் சேர்த்து இமாலய அடித்தளம் அமைத்தது. ஏற்கனவே பிளே-ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்ட குஜராத் அணிக்குச் சாய் சுதர்சனின் இந்த ஃபார்ம் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications
