அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் 35வது லீக் போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாடியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ரன்களை விளாசியது. குஜராத் அணி தரப்பில் பிரசித் கிருஷ்ணா 4 ஓவர்களில் 38 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஐபிஎல் வரலாற்றில் டெல்லி அணி 200 ரன்களுக்கு மேல் குவித்த ஒரு போட்டியில் கூட தோல்வியடைந்ததில்லை. அதேபோல் குஜராத் அணி ஒருமுறை கூட 200 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்ததே இல்லை. இதனால் குஜராத் அணியின் பேட்டிங் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதன்பின் சாய் சுதர்சன் - சுப்மன் கில் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

இதில் 2வது ஓவரிலேயே சுப்மன் கில் 7 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேற, சாய் சுதர்சன் - பட்லர் கூட்டணி அதிரடியாக ரன்களை குவித்தது. ஒரு பக்கம் மிட்சல் ஸ்டார்க் பவுலிங்கில் சாய் சுதர்சன் பவுண்டரியாக விளாச, பட்லர் ஸ்பின்னர்களை சிக்சர்களுக்கு அடித்து அசத்தினார். இதனால் பவர் பிளே ஓவர்கள் முடிவில் குஜராத் அணியின் ஸ்கோர் 67 ரன்களை குவித்தது.
தொடர்ந்து குல்தீப் யாதவ் பவுலிங்கில் சாய் சுதர்சன் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் பட்லர் - ரதர்ஃபோர்ட் கூட்டணி இணைந்தது. ரதர்ஃபோர்ட் களமிறங்கியது முதலே சிக்சரும், பவுண்டரியுமாய் விளாசியதால், 12 ஓவர்களில் குஜராத் அணியின் ஸ்கோர் 110 ரன்களை எட்டியது. அப்போது 13வது ஓவரை வீச மோகித் சர்மா வந்த போது, அடுத்தடுத்து 2 சிக்ஸ் உட்பட 18 ரன்கள் குவிக்கப்பட்டது.
தொடர்ந்து மிட்சல் ஸ்டார்க் வீசிய 15வது ஓவரில் பட்லர் தொடர்ச்சியாக 5 பவுண்டரிகளை விளாசினார். இதனால் ஆட்டத்தின் ஒட்டுமொத்த கட்டுப்பாடும் குஜராத் அணி பக்கம் திரும்பியது. குஜராத் அணியின் வெற்றிக்கு கடைசி 30 பந்துகளில் 46 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது. இதனிடையே பட்லர் காலில் வலி ஏற்பட, அவரால் வேகமாக ஓட முடியவில்லை.
ஆனாலும் நின்ற இடத்தில் இருந்தே பட்லர் சிக்ஸ், பவுண்டரி என்று டீல் செய்தார். இதனிடையே வெற்றிக்கு 8 பந்துகளில் 11 ரன்கள் தேவையாக இருந்த போது, ரதர்ஃபார்ட் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின் கடைசி ஓவரில் குஜராத் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது கடைசி ஓவரை வீச மிட்சல் ஸ்டார்க் அழைக்கப்பட்டார். இந்த பக்கம் ராகுல் திவாட்டியா - பட்லர் களத்தில் இருந்தனர்.
ஸ்டார்க் வீசிய முதல் பந்திலேயே ராகுல் திவாட்டியா சிக்ஸ் அடிக்க, தொடர்ந்து 2வது பந்தில் பவுண்டரி விளாசப்பட்டது. இதன் மூலமாக குஜராத் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. சிறப்பாக ஆடிய பட்லர் 97 ரன்கள் எடுத்து அசத்தினார். அதேபோல் குஜராத் அணி முதல்முறையாக 200 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்து புதிய வரலாறு படைத்துள்ளது.