அகமதாபாத்: டெல்லி அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் மற்றும் தமிழக வீரர் சாய் சுதர்சன் இடையில் சிறிய உரசல் ஏற்பட்டுள்ள சம்பவம் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது. மிட்சல் ஸ்டார்க் பவுலிங் செய்ய ஓடி வந்த போது, பவுலர் முனையில் நின்ற சாய் சுதர்சன் கிரீஸில் இருந்து சில அடிகள் ஓட தொடங்கினார். இதனால் உடனடியாக பவுலிங்கை நிறுத்திய மிட்சல் ஸ்டார்க், அவருக்கு வார்னிங் கொடுத்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 35வது லீக் போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து டெல்லி அணி விளையாடி வருகிறது. புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களில் இருக்கும் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்தது. இதனைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ரன்களை விளாசியது. சிறப்பாக ஆடிய அஷுதோஷ் சர்மா 37 ரன்களை விளாசினார்.

இதன்பின் குஜராத் அணி தரப்பில் சாய் சுதர்சன் - சுப்மன் கில் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. டெல்லி அணியின் தரப்பில் முதல் ஓவரை மிட்சல் ஸ்டார்க் வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தில் சாய் சுதர்சன் பவுண்டரி அடித்து அசத்தினார். தொடர்ந்து 2வது ஓவரில் கேப்டன் சுப்மன் கில் 7 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேற, பட்லர் - சாய் சுதர்சன் கூட்டணி இணைந்தது.
தொடர்ந்து 3வது ஓவரை வீசுவதற்கு மீண்டும் மிட்சல் ஸ்டார்க் வந்தார். அந்த ஓவரின் முதல் 2 பந்துகளில் சாய் சுதர்சன் பவுண்டரி விளாச, மிட்சல் ஸ்டார்க் டென்ஷனாகினார். இதன்பின் 1 ரன் எடுத்து சாய் சுதர்சன் எதிர்முனைக்கு சென்றார். தொடர்ந்து பட்லர் நிதானமாக விளையாட, கடைசி பந்தில் என்ன நடக்கும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. ஏனென்றால் சூழல் பதற்றமான ஒன்றாக மாறியது.
அப்போது மிட்சல் ஸ்டார்க் பவுலிங் செய்வதற்கு ஓடி வந்த போது, பவுலிங் முனையில் இருந்த சாய் சுதர்சன் முன்னெச்சரிக்கையாக கிரீஸில் இருந்து சில அடி தூரம் நடந்து சென்றார். இதனை பார்த்த மிட்சல் ஸ்டார்க், சடாரென பவுலிங் செய்வதை நிறுத்தி சாய் சுதர்சனை முறைத்தார். அதுமட்டுமல்லாமல் சாய் சுதர்சன் கிரீஸில் இருக்க வேண்டும் என்றும் வார்னிங் கொடுத்தார்.
இதனால் அகமதாபாத் மைதானத்தில் இருந்த ரசிகர்களும் உற்சாகமடைந்தனர். மிட்சல் ஸ்டார்க் பவுலிங்கில் ஹாட்ரிக் பவுண்டரியை சாய் சுதர்சன் விளாசியதே அவரின் கோபத்திற்கு காரணமாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். தொடர்ந்து சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் 21 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து குல்தீப் யாதவ் பவுலிங்கில் வெளியேறினார்.