மும்பை: ஐபிஎல் தொடரில் குஜராத் அணி 8 போட்டிகளில் 6 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் 12 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறது. எஞ்சியுள்ள 6 போட்டிகளில் 2ல் வென்றால் கூட குஜராத் அணி எளிதாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். இதனால் குஜராத் அணி 2வது முறையாக கோப்பையை வெல்ல வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.
கடந்த சீசனை போல் அல்லாமல் இந்த சீசனில் சுப்மன் கில் தலைமையில் களமிறங்கிய குஜராத் அணி மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதேபோல் சுப்மன் கில்லும் களத்தில் மிகச்சிறப்பாக அணியை வழிநடத்தி வருகிறார். பவுண்டரி லைனில் நின்று கொண்டு பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா கொடுக்கும் ஆலோசனையை களத்தில் சுப்மன் கில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

அதேபோல் பேட்டிங்கிலும் சுப்மன் கில் ஃபார்முக்கு வந்துள்ளார். கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆடிய சுப்மன் கில் 55 பந்துகளில் 3 சிக்ஸ், 10 பவுண்டரி உட்பட 90 ரன்களை விளாசி இருக்கிறார். மொத்தமாக இந்த சீசனில் 8 இன்னிங்ஸில் ஆடியுள்ள சுப்மன் கில் 3 அரைசதம் உட்பட 305 ரன்களை விளாசி இருக்கிறார்.
கேப்டன்சியிலும் அசத்தி வருவது சிஎஸ்கே ஜாம்பவான் சுரேஷ் ரெய்னாவை வெகுவாக ஈர்த்துள்ளது. இதுகுறித்து சுரேஷ் ரெய்னா பேசுகையில், கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் நிதானமாக நேரம் எடுத்து அவரின் திறமை மீது நம்பிக்கை வைத்தார். தற்போது சுப்மன் கில்லால் அதிரடியான ஷாட்களை ஆட முடிகிறது.
அதேபோல் டாட் பால் சதவிகிதத்தையும் சுப்மன் கில் குறைத்துள்ளார். ஏற்கனவே கேகேஆர் அணிக்காக ஆடிய சுஒப்மன் கில், அப்போதே பலரின் இதயங்களை வென்றுவிட்டார். அப்போத்யு சுப்மன் கில்லால் எளிதாக ஸ்பின்னர்கள் மற்றும் வேகப்பந்துவீச்சாளர்களை அட்டாக் செய்ய முடிகிறது. அவரிடம் இருக்கும் மிகச்சிறந்த விஷயம் என்னவென்றால், சக வீரர்களுடன் அவர் தனது தேவையை சிறப்பாக சொல்வதுதான்.
அவர் களத்திற்கு வெளியிலும் நல்ல உறவுடன் இருப்பதே குஜராத் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்து வருகிறது. ஃபீல்டிங்கை தொடர்ந்து மாற்றுவதோடு, பவுலர்களுடன் தொடர் ஆலோசனையில் இருந்து வருகிறார். கேகேஆர் அணிக்காக ஆடிய போது, சுப்மன் கில் வளர்ந்து வரும் வீரராகவே இருந்தார். ஆனால் இப்போது இந்திய கிரிக்கெட்டின் இளவரசனாக திரும்பி இருக்கிறார். இந்த இடம் அவருக்கு ஸ்பெஷலானது என்று தெரிவித்துள்ளார்.