GT vs RCB: அகமதாபாத்தில் 'பவர்ஃபுல்' மோதல்.. டாஸ் வென்ற குஜராத் அதிரடி முடிவு.. ஆர்சிபி 11 என்ன?
அகமதாபாத்: 2026 ஐபிஎல் தொடரின் 42-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் அகமதாபாத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன. நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இந்த முக்கியமான ஆட்டத்தில், டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதாக அறிவித்தார்.
அகமதாபாத் மைதானத்தில் ஆரம்ப ஓவர்களில் பந்து நன்றாக ஸ்விங் ஆகும் என்பதாலும், ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் பனிப்பொழிவு இருக்க வாய்ப்புள்ளதாலும் சேஸிங் செய்வதே சிறந்தது என கில் கூறினார். "இந்த இரண்டு போட்டிகள் தான் நாங்கள் தொடரில் எந்த இடத்திற்குச் செல்வோம் என்பதைத் தீர்மானிக்கும். ஆர்சிபி அணி நடப்பு சாம்பியனாக சிறப்பாக விளையாடி வருகிறது. ஆனால் நாங்கள் சரியான மனநிலையுடன் களம் இறங்குகிறோம்," என கில் தெரிவித்தார். குஜராத் அணி கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களுடன் இந்த ஆட்டத்திலும் களம் இறங்குகிறது.

ஆர்சிபி அணி கேப்டன் ரஜத் படிதார் பேசுகையில், "நாங்களும் முதலில் பந்துவீசவே நினைத்தோம். ஆடுகளத்தில் உள்ள பச்சை புற்கள் பந்துவீச்சாளர்களுக்குப் பெரிய அளவில் உதவி செய்யாது என நினைக்கிறேன். இருந்தபோதிலும், ஒரு சவாலான ஸ்கோரை இலக்காக நிர்ணயிப்போம். தொடரின் முதல் பாதியில் நாங்கள் விளையாடிய விதம் திருப்தி அளிக்கிறது. அதே உத்வேகத்துடன் இன்றும் விளையாடுவோம்" என்றார். ஆர்சிபி அணியிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, அதே அணியுடன் களம் காண்கிறது.
அகமதாபாத் ஆடுகளம் பேட்டர்களுக்கு சொர்க்கமாகத் திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில போட்டிகளில் இங்கு சராசரி ஸ்கோர் 196 ரன்களாக உள்ளது. ஆடுகளத்தின் மேல்புறத்தில் பச்சை புற்கள் காணப்படுவதால் பந்து நன்றாக எகிறி வரவும், வேகம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. இதனால் புவனேஷ்வர் குமார், முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் ககிசோ ரபாடா போன்ற வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இது சவாலாகவும் சாதகமாகவும் அமையும். குறிப்பாக டாப் ஆஃப் ஆஃப்-ஸ்டம்ப் லைனில் வீசப்படும் பந்துகளை அடிப்பது பேட்டர்களுக்குக் கடினமாக இருக்கும் என வர்ணனையாளர்கள் கணித்துள்ளனர்.
மைதானத்தின் பக்கவாட்டு எல்லைகள் 66 மீட்டர் அளவிலும், நேராக இருக்கும் எல்லைகள் 72 மீட்டர் அளவிலும் உள்ளன. பவுண்டரிகள் சமமாக இருப்பதால் பேட்டர்கள் அனைத்து திசைகளிலும் ரன் குவிக்க வாய்ப்புள்ளது. குஜராத் அணி தனது சொந்த மண்ணில் தனது வெற்றிச் சாதனையை மேம்படுத்தவும், பெங்களூரு அணி தனது வெற்றிகரமான பயணத்தைத் தொடரவும் இந்த போட்டியின் வெற்றி இரு அணிகளுக்கும் மிக அவசியம்.
குஜராத் டைட்டன்ஸ் (பிளேயிங் 11):
சுப்மன் கில் (கேப்டன்), சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஜேசன் ஹோல்டர், ஷாருக் கான், வாஷிங்டன் சுந்தர், அர்ஷத் கான், ரஷித் கான், ககிசோ ரபாடா, முகமது சிராஜ், மானவ் சுதர்.
குஜராத் டைட்டன்ஸ் இம்பாக்ட் வீரர்கள் - ராகுல் தெவாட்டியா, கிளென் பிலிப்ஸ், அனுஜ் ராவத், நிஷாந்த் சிந்து, குல்வந்த் கெஜ்ரோலியா.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (பிளேயிங் 11):
விராட் கோலி, ஜேக்கப் பெத்தேல், தேவ்தத் படிக்கல், ரஜத் பட்டிதார் (கேப்டன்), ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், குருணால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், சுயாஷ் சர்மா, ஜோஷ் ஹேசில்வுட்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இம்பாக்ட் வீரர்கள் - ரசிக் சலாம் தார், ஜோர்டான் காக்ஸ், மங்கேஷ் யாதவ், விக்கி ஓஸ்ட்வால், வெங்கடேஷ் ஐயர்.


Click it and Unblock the Notifications