GT vs RR: குவாலிபையர் 2-வில் ராஜஸ்தான் - குஜராத் மோதல்.. டாஸ், பிளேயிங் 11 மற்றும் பிட்ச் நிலவரம்
சண்டிகர்: 2026 ஐபிஎல் தொடரின் மிக முக்கியமான இரண்டாவது தகுதிச் சுற்று ஆட்டம் (குவாலிபையர் 2) இன்று சண்டிகர் முல்லன்பூர் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். டாஸ் வென்றது குறித்து அவர் கூறுகையில், "நாங்கள் முதலில் பேட்டிங் செய்கிறோம். ஆடுகளம் போட்டியின் இரண்டாவது பாதியில் சற்று மந்தமாக மாற வாய்ப்புள்ளது. எங்களிடம் சிறந்த பந்துவீச்சாளர்கள் இருப்பதால், முதலில் பெரிய ஸ்கோரை எட்டிவிட்டு பின்னர் அதைப் பாதுகாப்போம். அணியில் மாற்றங்கள் ஏதுமில்லை" என்றார்.

டாஸ் இழந்த குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறுகையில், "நாங்களும் டாஸ் வென்றிருந்தால் முதலில் பேட்டிங் செய்திருப்போம். இந்த ஆடுகளத்தில் ஏற்கனவே ஒரு போட்டி நடைபெற்றுள்ளதால், இது எப்படிச் செயல்படும் என்பது எங்களுக்குத் தெரியும். இது எங்களுக்கு ஒரு 'வாழ்வா-சாவா' போட்டி. இறுதிப்போட்டிக்குச் செல்ல முழு பலத்துடன் போராடுவோம். அணியில் சாய் கிஷோர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்" எனத் தெரிவித்தார்.
ஆடுகளம் எப்படி?
சண்டிகர் மைதானத்தின் பிட்ச் எண் 4-ல் இந்த போட்டி நடைபெறுகிறது. ஆடுகளம் குறித்து வல்லுநர்கள் கூறுகையில், மைதானத்தில் புற்கள் சீராக இருந்தாலும், அதன் உட்பகுதி மிகவும் உலர்ந்த நிலையில் உள்ளது. இதனால் பந்து நன்றாக பேட்டிற்கு வரும். வேகம் மற்றும் பவுன்ஸ் சாதகமாக இருக்கும். மைதானத்தின் ஒரு பக்கம் 69 மீட்டர் எல்லையும், மறுபக்கம் 63 மீட்டர் எல்லையும் உள்ளது. நேரடியாக சிக்சர் அடிக்கும் பகுதி 74 மீட்டராக உள்ளது. மைதானத்தில் வீசும் குளிர்ந்த காற்றால் இன்று பனிப்பொழிவு (Dew) இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இது பந்துவீச்சாளர்களுக்குப் பந்தைப் பிடிக்க வசதியாக இருக்கும். இந்தப் பிட்சில் 220 ரன்கள் என்பது சவாலான ஸ்கோராகக் கருதப்படுகிறது என்றனர்.
அணிகள்:
குஜராத் டைட்டன்ஸ் (விளையாடும் லெவன்): சாய் சுதர்சன், சுப்மன் கில்(கேப்டன்), ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), நிஷாந்த் சிந்து, வாஷிங்டன் சுந்தர், ஜேசன் ஹோல்டர், ரஷீத் கான், சாய் கிஷோர், ககிசோ ரபாடா, பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்
குஜராத் டைட்டன்ஸ் இம்பாக்ட் சப்ஸ்: ராகுல் தெவாட்டியா, கிளென் பிலிப்ஸ், அனுஜ் ராவத், குமார் குஷாக்ரா, அர்ஷத் கான்
ராஜஸ்தான் ராயல்ஸ் (விளையாடும் லெவன்): யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, துருவ் ஜூரல்(விக்கெட் கீப்பர்), ரியான் பராக்(கேப்டன்), டொனோவன் ஃபெரீரா, தசுன் ஷனகா, ரவீந்திர ஜடேஜா, ஜோஃப்ரா ஆர்ச்சர், நந்ரே பர்கர், பிரிஜேஷ் சர்மா, யஷ் ராஜ் புஞ்சா
ராஜஸ்தான் ராயல்ஸ் இம்பாக்ட் சப்ஸ்: சுபம் துபே, சுஷாந்த் மிஸ்ரா, அமன் ராவ் பெராலா, ரவி பிஷ்னோய், துஷார் தேஷ்பாண்டே
இறுதிப்போட்டி வாய்ப்பு
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, வரும் ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதும். ராஜஸ்தான் அணியில் வைபவ் சூர்யவன்ஷி, யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற அதிரடி வீரர்கள் இருப்பதால், அவர்கள் இமாலய ரன்களைக் குவிக்க முயல்வார்கள். அதே நேரத்தில் குஜராத் அணி தனது பந்துவீச்சு பலத்தால் அவர்களைக் கட்டுப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு இறுதிப்போட்டியில் இவ்விரு அணிகளும் மோதியபோது குஜராத் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த வரலாற்றை ராஜஸ்தான் மாற்றியமைக்குமா அல்லது குஜராத் மீண்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications