அகமதாபாத்: 2025 ஐபிஎல் தொடரில் சாய் சுதர்சன் தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகிறார். இதன் காரணமாக, அவர் தான் வருங்கால விராட் கோலி எனப் பலரும் சுட்டிக்காட்டி பாராட்டி வருகின்றனர். நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக அவர் 53 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்திருந்தார்.
இதுவரை நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் ஐந்து இன்னிங்ஸ்களில் 273 ரன்கள் சேர்த்திருக்கிறார். அவரது சராசரி 54.6 ஆக உள்ளது. அவரது ஸ்ட்ரைக் ரேட் 151.66 என்பதாக உள்ளது. பல அதிரடி பேட்ஸ்மேன்களுக்கு இணையாக அவரது ஸ்ட்ரைக் ரேட் இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

இதற்கு முந்தைய ஆண்டுகளிலும் அவர் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் சேர்த்திருக்கிறார். ஒட்டுமொத்தமாக ஐபிஎல் தொடரில் அவர் 30 இன்னிங்ஸ்களில் 1307 ரன்கள் சேர்த்திருக்கிறார். அவரது சராசரி 48.93 ஆகவும், ஒட்டுமொத்த ஸ்ட்ரைக் ரேட் 141.60 ஆகவும் உள்ளது. மேலும், ஐபிஎல் வரலாற்றிலேயே 30 இன்னிங்ஸ்களுக்குப் பிறகு அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
முன்னதாக, ஷான் மார்ஷ் 30 ஐபிஎல் இன்னிங்ஸ்களுக்குப் பிறகு 1338 ரன்கள் சேர்த்திருந்தார். தற்போது சாய் சுதர்சன் 1307 ரன்கள் சேர்த்து இருக்கிறார். இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டி மிகவும் சாய் சுதர்ஷன் நம்பகத்தன்மை வாய்ந்த பேட்ஸ்மேன் எனப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
குஜராத் டைட்டன்ஸ் அணி கடந்த மூன்று ஐபிஎல் தொடர்களிலும் ஆதிக்கம் செலுத்திய நிலையில், அதில் சாய் சுதர்சனின் பங்கும் அதிகம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அவர் அந்த அணிக்காகத் தனது சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். ஆனால், அவருக்கு இன்னும் இந்திய அணியில் போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை.
அவர் இதுவரை மூன்று ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி 127 ரன்கள் சேர்த்திருக்கிறார். அதிலும் அவரது சராசரி 63.5 ஆக உள்ளது. இந்த நிலையில், அவருக்கு இனி தொடர்ந்து இந்திய அணியில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளன.
விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதி காலகட்டத்தில் இருக்கிறார். அவரது ஓய்வுக்குப் பிறகு இந்திய அணியில் நம்பகத்தன்மை வாய்ந்த பேட்ஸ்மேன் தேவை. சாய் சுதர்சன் தற்போது துவக்க வீரராக விளையாடுகிறார். அவர் மூன்றாம் வரிசையிலும் சிறப்பாக விளையாடும் வாய்ப்பு உள்ளது. இவற்றை சுட்டிக்காட்டி சாய் சுதர்சனுக்கு இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு அளிக்க வேண்டும் என முன்னாள் வீரர்களும் கூறி வருகின்றனர்.