சம்பவம் செய்த டாப் 3.. கில், பட்லரிடம் அடங்கிய ஐதராபாத் அணி.. குஜராத் அணி 224 ரன்கள் குவிப்பு!
அகமதாபாத்: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 224 ரன்களை குவித்துள்ளது. முதல் 6 ஓவர்களில் 82 ரன்களை குவித்த நிலையில், அடுத்த 9 ஓவர்களில் 90 ரன்கள் குவிக்கப்பட்டது. ஆனால் கடைசி 5 ஓவர்களில் 62 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதனால் ஐதராபாத் அணிக்கு கொஞ்சம் சாதகம் ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடரின் 51வது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்த்து குஜராத் அணி களமிறங்கியுள்ளது. இந்த போட்டியில் டாச் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் குஜராத் அணிக்காக சாய் சுதர்சன் - சுப்மன் கில் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் ஓவரிலேயே சுப்மன் கில் சிக்ஸ் அடிக்க, ஷமி வீசிய 3வது ஓவரில் சாய் சுதர்சன் 5 பவுண்டரிகளை விளாசி தள்ளினார்.

தொடர்ந்து பேட் கம்மின்ஸ் பவுலிங்கிலும் சிக்ஸ், பவுண்டரி என்று அடிக்கப்பட, ஹர்சல் படேல் ஓவரில் சாய் சுதர்சன் 4 பவுண்டரிகளை விளாசி தள்ளினார். இதனால் 6 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 82 ரன்களை குவித்தனர். இதனைத் தொடர்ந்து ஜீஷன் அன்சாரி பந்தில் சாய் சுதர்சன் 48 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் சுப்மன் கில் - பட்லர் கூட்டணி இணைந்தது.
தொடர்ந்து ஷமி வீசிய 10வது ஓவரில் 4, 6, 4 என்று 17 ரன்கள் சேர்க்கப்பட, சுப்மன் கில் 25 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இதன் காரணமாக 10 ஓவர்களிலேயே குஜராத் அணியின் ஸ்கோர் 120 ரன்களை எட்டியது. பின்னர் ஒவ்வொரு ஓவரிலும் 2 பவுண்டரிகளை சுப்மன் கில் விளாசிய நிலையில், ஹர்சல் படேலின் அபார ஃபீல்டிங்கால் சுப்மன் கில் 76 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின்னர் வாஷிங்டன் சுந்தர் களமிறக்கப்பட, பட்லர் அதிரடியை கையில் எடுத்தார். சிறப்பாக ஆடிய அவர் 31 பந்துகளில் அரைசதம் கடக்க, கடைசி 3 ஓவர்களில் கியரை மாற்றினார். ஆனால் 19வது ஓவரை வீசிய கம்மின்ஸ் பந்தில் பட்லர் 37 பந்துகளில் 64 ரன்களில் ஆட்டமிழக்க, ஷாரூக் கான் களமிறக்கப்பட்டார். இதன்பின் கடைசி ஓவரை வீச உனாத்கட் அழைக்கப்பட்டார்.
இந்த ஓவரில் வாஷிங்டன் சுந்தர் 21 ரன்களிலும், திவாட்டியா 6 ரன்களிலும், ரஷித் கான் டக் அவுட்டாகியும் வெளியேறினார். இதன் காரணமாக குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 224 ரன்களை குவித்துள்ளது. ஐதராபாத் அணி தரப்பில் உனாத்கட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.


Click it and Unblock the Notifications