பிரசித் கிருஷ்ணா வீசிய 4 ஓவர்.. இஷான் கிஷன் கொடுத்த ட்விஸ்ட்.. குஜராத் அணியிடம் வீழ்ந்த ஐதராபாத்!
அகமதாபாத்: ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணியை எதிர்த்து குஜராத் அணி களமிறங்கியது. இந்த போட்டியில் முதல் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 224 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய சுப்மன் கில் 76 ரன்களையும், பட்லர் 64 ரன்களையும், சாய் சுதர்சன் 48 ரன்களையும் விளாசினர். ஐதராபாத் அணி தரப்பில் உனாத்கட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்பின் 225 ரன்கள் என்ற வலிமையான இலக்கை நோக்கி அபிஷேக் சர்மா - டிராவிஸ் ஹெட் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. சிராஜ் வீசிய முதல் 15 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், இஷாந்த் சர்மா வீசிய 4வது ஓவரில் 12 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதன்பின் பிரசித் கிருஷ்ணா வீசிய 5வது ஓவரில் டிராவிஸ் ஹெட் 20 ரன்களில் ஆட்டமிழக்க, இஷான் கிஷன் களமிறங்கினார்.

அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாட, இஷான் கிஷன் உருட்டு உருட்டு என்று உருட்டினார். பவுண்டரி அடிக்கவே தடுமாறிய இஷான் கிஷன் 17 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து வெளியேற, கிளாசன் களம் புகுந்தார். இதன்பின் குஜராத் அணி தரப்பில் உடனடியாக ரஷித் கான் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். ஆனால் அந்த ஓவரில் 2 சிக்சர் அடிக்கப்பட, மறுமுனையில் அபிஷேக் சர்மா 28 பந்துகளில் அரைசதத்தை எட்டினார்.
தொடர்ந்து ரஷித் கான் பவுலிங்கில் இருவரும் அட்டாக் செய்ய, ஐதராபாத் அணியின் ஸ்கோர் 13 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 123 ரன்களை எடுத்தது. இந்த நிலையில் 14வது ஓவரை வீசிய பிரசித் கிருஷ்ணா வெறும் 4 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். இந்த ஓவர்தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.
தொடர்ந்து இஷாந்த் சர்மா பந்தில் அபிஷேக் சர்மா 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, கிளாசன் 23 ரன்களில் பெவிலியன் திரும்பினார். பின்னர் சிராஜ் வீசிய 17வது ஓவரில் அனிகேத் வர்மா மற்றும் கமிண்டு மெண்டிஸ் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழக்க, ஐதராபாத் அணி 149 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் ரஷித் கான் வீசிய 19வது ஓவரில் 3 சிக்ஸ் உட்பட 21 ரன்களை நிதிஷ் குமார் ரெட்டி விளாசினார்.
இருந்தாலும் கடைசி 6 பந்துகளில் ஐதராபாத் வெற்றிக்கு 44 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட, ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகல் இழப்பிற்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இதன் மூலமாக குஜராத் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications