உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
இந்தூர்: இந்திய அணியின் முன்னணி வீரரான ஹனுமா விஹாரி கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்த போதும், ஒற்றை கையால் அணிக்காக போராடியது பாராட்டை பெற்று வருகிறது.
இந்தியாவின் பிரபல உள்நாட்டு தொடரான ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டி வருகிறது. இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் ஆந்திரா மற்றும் மத்திய பிரதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இந்தூரில் கடந்த ஜனவரி 31ம் தேதி தொடங்கிய இந்த போட்டி விறுவிறுப்பாக 3 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் ஆந்திரா கேப்டன் ஹனுமா விஹாரி.

என்ன நடந்தது?
முதல் இன்னிங்ஸின் போது ஆவேஷ் கான் வீசிய அதிவேக பவுன்சரை எதிர்கொண்ட போது ஹனுமா விஹாரியின் கையிலேயே பலத்த அடி விழுந்தது. இதனால் வலியில் துடித்த அவரை உடனடியாக களத்தில் இருந்து அழைத்துச்சென்றனர். கையில் லேசான முறிவு ஏற்பட்டிருப்பதால் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறினர். எனினும் அணிக்காக நான் எப்போதும் இருப்பேன் என்ற எண்ணத்துடன் இடதுகையில் விளையாட துணிச்சலுடன் களமிறங்கினார்.

துணிச்சலான முடிவு
கடைசி விக்கெட்டிற்காக மீண்டும் களமிறங்கிய அவர், 57 பந்துகளில் 27 ரன்களை அடித்தார். இதனால் முதல் இன்னிங்ஸில் அந்த அணி 379 ரன்களை சேர்த்தது. 2வது இன்னிங்ஸில் இவரின் தியாகம் மேலும் ஒருபடி மேல் சென்றது. 2வது இன்னிங்ஸில் 76 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்த சூழலில், நான் காப்பாற்றுகிறேன் ஒற்றை கையில் விளையாடுவேன் என பேட்டுடன் களமிறங்கினார் விஹாரி.

ஒரு கையில் போராட்டம்
ஆவேஷ் போன்ற அதிவேக பவுலர்களையும் ஒரே கையால் சமாளித்தார். கடைசி நேரத்தில் 16 பந்துகளை சந்தித்த அவர் 16 ரன்களை சேர்த்தார். இதில் 3 பவுண்டரிகளும் அடங்கும் என்பதே ஆச்சரிய விஷயமாகும். விஹாரியின் ஆட்டத்தால் ஆந்திர அணி 93 ரன்களுக்கு உயர்ந்தது. அவரின் இந்த ஆட்டத்தை பார்த்து எதிரணி வீரர்கள் உட்பட அனைவருமே எழுந்து நின்று கைத்தட்டினர்.

முதல் முறை அல்ல
விஹாரி இதுபோன்று செய்வது முதல்முறையல்ல. கடந்த 2021ம் ஆண்டு பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தசைநார் கிழிந்த போதும், வலியை பொருட்படுத்தாமல் விளையாடினார். அஸ்வினுடன் அவர் அன்று அமைத்த பார்ட்னர்ஷிப் தான் இந்தியாவுக்கு பலமாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications