"350 ரன் அடித்தும் காப்பாற்ற முடியலை.. இது இந்திய அணிக்கு விடப்பட்ட..".. ஹனுமா விஹாரி விமர்சனம்
மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் 351 ரன்கள் குவித்தும் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், "இந்திய அணி முன்னோக்கிச் செல்லாமல் பின்னோக்கிப் போகிறது" என்று இந்திய வீரர் ஹனுமா விஹாரி பந்துவீச்சாளர்களைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
முல்லான்பூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் கே.எல்.ராகுல் 87 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 129 ரன்கள் விளாச, இந்தியா 351 ரன்கள் குவித்தது. ஆனால் பலவீனமான பந்துவீச்சால் வெஸ்ட் இண்டீஸ் அணி 48.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த அதிர்ச்சித் தோல்வி குறித்து தனது இணையப் பக்கத்தில் பேசிய ஹனுமா விஹாரி பேசுகையில், "350 ரன்களை அடித்தும் நம்மால் அதைக் காப்பாற்ற முடியவில்லை. இது அணிக்கு விடப்பட்ட எச்சரிக்கை மணி இல்லையா? இந்திய அணி முன்னோக்கிச் செல்லாமல் பின்னோக்கிப் போகிறது என்றுதான் நான் நினைக்கிறேன். இது ஒரு பெரிய பின்னடைவு. 350 ரன்களை அடித்த பிறகு இந்தியா தோற்பது மிகவும் அரிதான விஷயம். முந்தைய போட்டியிலும் பவுலர்கள் 405 ரன்களை வாரி வழங்கினர். எனவே இந்த பந்துவீச்சு வரிசையைத் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும்.
குர்னூர் பிராருக்கு உடற்தகுதிப் பிரச்னைகள் உள்ளன. நிதீஷ் குமார் ரெட்டி சுமாராக வீசினார். சிராஜ் ஓரளவு வீசினாலும் அவரை உலகத்தரமான பந்துவீச்சாளர் என்று சொல்ல முடியாது. குல்தீப் யாதவும் தடுமாறினார். 350 ரன்களைத் தற்காக்கும் போது நமன் திரைத் தவிர வலுவான 5-வது பந்துவீச்சாளர் தேவை. இங்குதான் நமது பந்துவீச்சு பலவீனம் அம்பலமானது. இந்த இடத்தில் ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா இல்லாத குறை அப்பட்டமாகத் தெரிந்தது.
மாற்றுப் பந்துவீச்சாளர்களும் ஏமாற்றம் அளித்தனர். அன்ஷுல் கம்போஜ் நல்ல வேகத்தில் வீசியது ஆறுதல் என்றாலும், அவர் செல்ல வேண்டிய தூரம் அதிகம். உலகக்கோப்பைக்கு இன்னும் ஒரு வருடமே உள்ள நிலையில், சரியான பந்துவீச்சு அமைப்பை இன்னும் உருவாக்க முடியாமல் இருப்பது நல்லதல்ல" என்று ஹனுமா விஹாரி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications


