“இதோடு நிறுத்திக்கோங்க.. அவர் ஒன்னும் குற்றவாளி இல்ல” கே.எல்.ராகுல் விவகாரம்.. வெடித்த ஹர்பஜன் சிங்
மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வீரர் கே.எல்.ராகுலின் ஃபார்ம் அவுட் விவகாரம் சூடுபிடித்திருக்கும் சூழலில் அவருக்கு ஆதரவாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் குரல் எழுப்பியுள்ளார். அவரை குற்றவாளி போல நடத்த வேண்டாம் என விளாசியுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை சுவாரஸ்ய கட்டத்தை எட்டியுள்ளது. முதல் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி கண்டுள்ள சூழலில் அடுத்த 2 போட்டிகளிலாவது ஆஸ்திரேலியா வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ஆனால் இந்த பரபரப்பை விட கே.எல்.ராகுல் குறித்த பிரச்சினைகள் தான் தற்போது பெரிதாக வெடித்துள்ளது. குறிப்பாக முன்னாள் வீரர்கள் வெங்கடேஷ் பிரசாத் மற்றும் ஆகாஷ் சோப்ரா இந்த விவகாரத்தில் சண்டையிட்டு வருகின்றனர்.

வெங்கடேஷின் புள்ளிவிவரம்
நடப்பு பார்டர் கவாஸ்கர் கோப்பையில் இதுவரை 3 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள கே.எல்.ராகுல் 20,15,1 என மோசமான ரன்களில் அவுட்டானார். சமீப காலமாக அனைத்து வடிவ போட்டிகளிலும் சொதப்பி வரும் ராகுலுக்கு வாய்ப்பு தரக்கூடாது என பலரும் விமர்சித்தனர். குறிப்பாக முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத், கே.எல்.ராகுலை பகைத்துக்கொண்டால் ஐபிஎல்-ல் பயிற்சியாளர், ஆலோசகர் பதவிகள் கிடைக்காது என்பதால் யாருமே வாய்திறக்கவில்ல. அவர் அணியில் இருக்கவே கூடாது என்பது போல புள்ளிவிவரத்துடன் பதிவிட்டார்.

வெடித்த சர்ச்சை
இதனால் கடுப்பான முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, எனக்கு ஐபிஎல்-ல் எந்தவித பதவியும், பணமும் தேவை இல்லை. தேவையில்லாத வார்த்தைகளை பயன்படுத்த தேவையில்லை. ஒரு தொடர் நடந்துக்கொண்டிருக்கும் போதே வீரரை இப்படி விமர்சித்தால், அவர் மனதளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே இதனை தவிர்க்க வேண்டும் என ஆகாஷ் சோப்ரா கூறினார். இதற்கும் வெங்கடேஷ் பதில் கொடுக்க, இருவருக்கும் இடையே பிரச்சினை வெடித்திருக்கிறது.

ஹர்பஜன் சிங் விளாசல்
இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஹர்பஜன் சிங் வெடித்துள்ளார். ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், கே.எல்.ராகுலை தயவு செய்து விட்டுவிடுங்கள். அவர் ஒன்றும் குற்றவாளி கிடையாது. எனவே அவர் குறித்து மேலும் மேலும் பேசி அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டாம். கிரிக்கெட் வீரர்கள் அனைவருமே கடினமான சூழல்களை எதிர்கொண்டிருப்போம். ஃபார்ம் அவுட்டாகும் முதல் வீரரும் அவர் இல்லை, கடைசி வீரரும் இல்லை.

நினைவில் கொள்ளுங்கள்
கே.எல்.ராகுல் ஒரு சிறந்த வீரர். நமது நாட்டிற்காக தான் அவர் விளையாடுகிறார் என்பதை ஒரு நிமிடம் நினைத்து பாருங்கள். அவர் மீது நம்பிக்கை வைத்து, விட்டுவிடுங்கள் என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். இது ஒருபுறம் இருக்க, ராகுல் டிராவிட் ஏற்கனவே தனது முடிவை கூறிவிட்டார். அதில் அயல்நாட்டு களங்களில் கே.எல்.ராகுலின் சராசரி ரன்கள் சிறப்பாக இருப்பதால், அவருக்கு ஆதரவு கொடுப்போம் எனக்கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications