“முதலில் உங்களை காப்பாத்திக்கோங்க” ஆசிய கோப்பை குறித்த பாகிஸ்தானின் மிரட்டல்.. ஹர்பஜன் சிங் விளாசல்
மும்பை: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முதலில் அவர்களின் வீரர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்திவிட்டு, பின்னர் இந்திய வீரர்களுக்கு அழைப்புக்கொடுக்க வேண்டும் என ஹர்பஜன் சிங் விளாசியுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே எப்போதுமே ஏதாவது பிரச்சினை இருந்துக்கொண்டே தான் உள்ளது. அதற்கு தீணிப்போடும் வகையில் தான் ஆசிய கோப்பை பிரச்சினைக்கும் இன்னும் தீர்வு காணாமல் உள்ளனர்.
2023ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் தான் வைத்துள்ளது. ஆனால் பாகிஸ்தானுக்கு இந்திய அணி செல்லாது என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்தார்.

ஆசிய கோப்பை தொடர்
பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானுக்கு இந்திய வீரர்கள் செல்ல மாட்டார்கள் என்றும் வேறு நாட்டிற்கு ஆசிய கோப்பை போட்டிகளை மாற்ற முடிவெடுக்கப்படும் என ஜெய் ஷா அறிவித்தார். ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் அவர் செயல்பட்டு வருவதால் மற்ற வாரியங்களும் ஒப்புக்கொண்டன. ஆனால் பாகிஸ்தான் வாரியம் இதனை கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ளவே இல்லை.

பாகிஸ்தானின் பிடிவாதம்
இதுகுறித்து ஆசிய கவுன்சில் கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் வாரிய தலைவர் நஜிம் சேதி, ஒருவேளை இந்திய வீரர்கள் பாகிஸ்தானுக்கு வந்து விளையாட வில்லை என்றால் இந்தாண்டு இந்தியாவில் நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை தொடருக்காக பாகிஸ்தான் வீரர்கள் வரமாட்டார்கள் என தடாலடியாக தெரிவித்தது.

ஹர்பஜன் சிங் விளாசல்
இந்நிலையில் இதுகுறித்து ஹர்பஜன் சிங் காட்டமாக பேசியுள்ளார். அதில், நம் வீரர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பக்கூடாது என பிசிசிஐ எடுத்துள்ள முடிவு மிகவும் சரியானது. சமீபத்தில் கூட பாகிஸ்தானின் கராச்சி மைதானத்திற்கு அருகில் அசம்பாவித சம்பவம் ஏற்பட்டது. எனவே எப்போது வேண்டுமானாலும் பிரச்சினைகள் ஏற்படலாம், பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படலாம்.

பாதுகாப்பு பிரச்சினை
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் போது மைதானத்திற்கு அருகே அசம்பாவிதம் ஏற்பட்டதால், போட்டிகள் நிறுத்தப்பட்டு, பாபர் அசாம் உள்ளிட்ட வீரர்கள் பத்திரமாக அழைத்துச்செல்லப்பட்டனர். எனவே உங்களின் வீரர்களை முதலில் பாதுகாப்பாக பார்த்துக்கொள்ளுங்கள், பின்னர் எங்களை அழைக்கலாம் என்பது போல ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications