நான் செய்தது அசிங்கமான செயல் தான்.. ஆனால் இதுக்கு பின்னால் சுயநலம் தான் இருக்கு- ஹர்பஜன் சிங் சாடல்
மும்பை: 17 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சம்பவம் தொடர்பான வீடியோவை தற்போது வெளியிட்டு இருப்பது சுயநலமே தவிர வேறு எதுவும் இல்லை என ஹர்பஜன்சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2008 ஆம் ஆண்டு சீசனின் போது மும்பை இந்தியன்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் பலபரீட்சை நடத்தியது.
இதில் மும்பை அணியின் கேப்டனாக இருந்த ஹர்பஜன் சிங் போட்டி முடிந்த பிறகு கைகுலுக்க சென்றபோது ஸ்ரீசாந்தை கன்னத்தில் அறைந்தார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் ஹர்பஜன் சிங் 8 போட்டிகளில் விளையாட தடை பெற்றார்.

கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய அதிர்வலையை இந்த சம்பவம் ஏற்படுத்தியது. எனினும் தனது செயலுக்கு ஹரபஜன் சிங் மன்னிப்பு கேட்டு ஸ்ரீசாந்துடன் தற்போது நட்புறவில் இருக்கின்றார். இந்த வீடியோ இதுவரை வெளியிடப்படவே இல்லை. ஸ்ரீசாந்த் அழுகும் காட்சி மட்டும் தான் ரசிகர்களிடம் காண்பிக்கப்பட்டது.
ஆனால் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த காட்சியை தற்போது லலித் மோடி வெளியிட்டார். இது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. 17 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தை ஏன் இப்போது வெளியிட வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஹர்பஜன் சிங்கிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த ஹர்பஜன்சிங்," இந்த வீடியோ வெளியிட்ட விதம் மிகவும் தவறானது. இது தற்போது வெளியிடப்பட்டிருக்கக் கூடாது. ஆனால் இதற்குப் பின்னால் சுயநலமான விஷயமே இருக்குமே தவிர, வேறு எதுவும் இல்லை. இத்தனை ஆண்டுகள் கழித்து மக்கள் எல்லாம் அதனை மறந்த பிறகு ஏன் அது குறித்து நினைவுபடுத்த வேண்டும்.
அப்போது நடந்த சம்பவம் என் மனதை மிகவும் பாதித்தது. நான் செய்தது மிகப்பெரிய தவறு. ஒவ்வொரு வீரர்களும் விளையாடும்போது மனதில் நிறைய விஷயங்கள் ஓடும். அப்போது சில தவறுகள் நடக்கத்தான் செய்யும். நான் அவ்வாறு ஈடுபட்டதை நினைத்து இப்போதும் வெட்கப்படுகின்றேன். நான் தவறு செய்து விட்டேன். மனிதர்கள் என்றால் தவறு செய்ய தான் செய்வார்கள்.
தற்போது இந்த வீடியோ மீண்டும் வைரலாகி இருப்பது உண்மையிலேயே துரதிர்ஷ்டவசமான சம்பவம் தான். என்னுடைய தவறுக்கு நான் விநாயகரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன். மீண்டும் இது போல் ஒரு தவறு நடந்தால் அதற்கும் மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications