Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

17 ஆண்டுகளுக்குப் பின் வெளியான ஹர்பஜன் - ஸ்ரீசாந்த் “ஸ்லாப்கேட்” வீடியோ.. வெளியிட்ட லலித் மோடி

மும்பை: ஐபிஎல் வரலாற்றின் கரும்புள்ளிகளில் ஒன்றான 'ஸ்லாப்கேட்' சம்பவம், நடந்து 17 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அதன் உண்மையான வீடியோ முதல்முறையாக இப்போது வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரின் முன்னாள் தலைவர் லலித் மோடி, இதுவரை யாரும் பார்த்திராத அந்த வீடியோவை வெளியிட்டு, கிரிக்கெட் உலகில் மீண்டும் ஒரு புயலைக் கிளப்பியுள்ளார்.

2008-ம் ஆண்டு, ஐபிஎல் தொடரின் முதல் சீசனில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் (தற்போது பஞ்சாப் கிங்ஸ்) அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது இந்த விரும்பத்தகாத சம்பவம் நிகழ்ந்தது. மும்பை அணியின் கேப்டனாக இருந்த ஹர்பஜன் சிங், பஞ்சாப் அணி வீரர் ஸ்ரீசாந்தைக் கன்னத்தில் அறைந்தார். களத்திலேயே ஸ்ரீசாந்த் கண்ணீர் விட்டு அழுத காட்சிகள் அப்போது ஒளிபரப்பானாலும், ஹர்பஜன் அறைந்ததற்கான வீடியோ ஆதாரம் வெளியாகவில்லை.

Harbhajan Singh - Sreesanth Slapgate Viral Video After 17 Years

இந்நிலையில், ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்குடன் ஒரு போட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய லலித் மோடி, அந்த அரிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "போட்டி முடிந்துவிட்டது, ஒளிபரப்பு கேமராக்கள் அனைத்தும் அணைக்கப்பட்டுவிட்டன. ஆனால், எனது பாதுகாப்பு கேமராக்களில் ஒன்று இயங்கிக்கொண்டிருந்தது. அதில் ஹர்பஜனுக்கும் ஸ்ரீசாந்துக்கும் இடையேயான அந்தச் சம்பவம் பதிவானது. இத்தனை ஆண்டுகளாக நான் இதை வெளியிடவில்லை. இப்போது 18 ஆண்டுகள் கடந்துவிட்டன" என்று கூறி வீடியோவை வெளியிட்டார்.

அந்த வீடியோவில் போட்டி முடிந்து மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர்கள் கைகுலுக்கி செல்லும் போது ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த்தை வேகமாக அறைந்து விட்டு செல்கிறார். அப்போது ஸ்ரீசாந்த் அழுததோடு மீண்டும் ஹர்பஜனை நோக்கி பேசுகிறார். ஜெயவர்தனே ஓடி வந்து ஸ்ரீசாந்தை சமாதானம் செய்ய முயல்கிறார்.

அப்போது ஹர்பஜன் சிங் ஸ்ரீசாந்தை நோக்கி மீண்டும் ஆவேசமாக ஓடி வருகிறார். பாதுகாவலர் மற்றும் இர்பான் பதான் குறுக்கே வந்து ஹர்பஜன் சிங்கை சமாதானம் செய்து அழைத்து செல்கின்றனர். இந்த காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

"என் வாழ்க்கையிலிருந்து அதை நீக்க விரும்புகிறேன்" - ஹர்பஜன் உருக்கம்

இந்த 'ஸ்லாப்கேட்' சம்பவம் குறித்து ஹர்பஜன் சிங் சமீபத்தில் மனம் திறந்து பேசியிருந்தார். ரவிச்சந்திரன் அஸ்வினின் யூடியூப் நிகழ்ச்சியில் பேசிய அவர், "என் கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து ஒரேயொரு சம்பவத்தை மட்டும் நீக்கிவிட வேண்டும் என்று நினைத்தால், அது ஸ்ரீசாந்துடனான அந்தச் சம்பவமாகத்தான் இருக்கும். அன்று நான் செய்தது முற்றிலும் தவறு. அதற்காக 200 முறைக்கு மேல் மன்னிப்புக் கேட்டிருப்பேன்" என்றார்.

மேலும், தன் மனதை ஆழமாகப் பாதித்த ஒரு நிகழ்வையும் அவர் பகிர்ந்துகொண்டார். "பல ஆண்டுகளுக்குப் பிறகு நான் ஸ்ரீசாந்தின் மகளைச் சந்தித்தேன். நான் அவளிடம் மிகுந்த அன்புடன் பேச முயன்றபோது, அவள், 'நான் உங்களிடம் பேச விரும்பவில்லை. நீங்கள் என் அப்பாவை அடித்தவர்' என்று சொன்னாள். அந்தக் கணத்தில் என் இதயம் நொறுங்கிவிட்டது. நான் அழும் நிலைக்குச் சென்றுவிட்டேன். அவள் மனதில் நான் எவ்வளவு மோசமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறேன் என்று நினைத்து மிகவும் வருந்தினேன். இப்போதும் நான் அவரது மகளிடம் மன்னிப்புக் கேட்கிறேன்," என்று ஹர்பஜன் உருக்கமாகக் கூறியிருந்தார்.

லலித் மோடி இப்போது வீடியோவை வெளியிட்டிருப்பது, பழைய காயங்களைக் கிளறினாலும், அந்த ஒரு தவறுக்காக ஹர்பஜன் சிங் இத்தனை ஆண்டுகளாக எவ்வளவு மன வேதனையை அனுபவித்து வருகிறார் என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

Story first published: Friday, August 29, 2025, 14:34 [IST]
Other articles published on Aug 29, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+