“10 போட்டி வச்சாலும் ஜெயிக்க மாட்டீங்க”.. ஆஸ்திரேலியா மோசமாக தோற்பது ஏன்?.. ஹர்பஜன் சிங் பளிச் பதில்
மும்பை: இந்தியாவுடன் 10 டெஸ்ட் போட்டிகள் நடத்தினாலும் கூட ஆஸ்திரேலியா அனைத்திலும் தோற்றுவிடும் என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் படு மோசமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை நடந்துள்ள 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி கண்டு முன்னிலை பெற்றுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணி முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் வித்தியாசத்திலும், 2வது டெஸ்டில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் மோசமாக தோற்றது.

ஆஸி, டெஸ்ட் போட்டி
கடந்த மூன்று பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர்களிலும் வெற்றியை கண்டுள்ள இந்திய அணி இந்த முறையும் கோப்பையை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது. இதனையடுத்து இனி வரும் 2 டெஸ்ட் போட்டிகளிலும் எப்படியாவது வெற்றி கண்டு ஒயிட் வாஷ் ஆவதை தவிர்க்க ஆஸ்திரேலிய வீரர்கள் முனைப்புடன் இருக்கிறார். இதற்கேற்றார் போல முன்னாள் வீரர் பிரட் லீயும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

ஹர்பஜன் விமர்சனம்
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி குறித்து ஹர்பஜன் சிங் மோசமான விமர்சனத்தை செய்துள்ளார். அதில், ரவிச்சந்திரன் அஸ்வின் போலே அச்சு அசலாக பந்துவீசக்கூடிய பவுலரை வைத்து ஆஸ்திரேலியா பயிற்சி பெற்றது எனக்கூறினார். அதாவது அஸ்வினின் போலியுடன் பயிற்சி பெற்றார்கள். ஆனால் எனக்கென்னவோ ஆஸ்திரேலிய அணியே போலியாக மாறிவிட்டது போல தோன்றுகிறது. ஏனென்றால் அவர்களின் மனநிலை அப்படி இருக்கிறது.

காரணம் என்ன
முற்றிலும் நெகட்டிவான விஷயங்களை மட்டுமே நினைத்துக்கொண்டு விளையாடுகின்றனர். பிட்ச்-ஐ பற்றியும், இந்திய பவுலர்களை பற்றியும் நினைத்து நிறைய குழப்பமடைந்ததால் பந்துவீசுவதற்கு முன்னதாகவே அவர்கள் தோற்றுவிட்டனர். அவர்களின் ஆட்டத்தை பார்த்தால் போட்டிக்கு தயாராகி வந்தது போலவே தெரியவில்லை. விக்கெட்டை எப்படி இழப்பது என்பதற்கு பயிற்சி பெற்றது போல் தெரிகிறது.

ஓய்வறையிலேயே தோல்வி
இந்த தொடரில் இந்திய அணி 4 - 0 என நிச்சயம் ஒயிட் வாஷ் செய்யும். ஒருவழியாக 10 போட்டிகள் கொண்ட தொடராக இதனை நடத்தினாலும், ஆஸ்திரேலியா அனைத்திலும் தோற்றுவிட்டு தான் செல்லும். அந்த அளவிற்கு பலவீனமாக சிந்திக்கின்றனர். பிட்ச்-ல் பிரச்சினை இருந்தால் அதனை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். ஆனால் ஓய்வறையிலேயே சோர்ந்துவிடுகின்றனர் என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications