கராச்சி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் தன்வீர் அகமது இடையேயான வார்த்தைப் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை போட்டி நடைபெற உள்ள நிலையில் இவர்கள் இருவரும் சமூக வலைதளத்தில் வீடியோக்களை வெளியிட்டு மோதி வருகின்றனர். ஹர்பஜன் சிங் தன்னைத் தரக்குறைவாகப் பேசியதாகக் குற்றம் சாட்டியுள்ளார் தன்வீர்.
சமீபத்தில் பாகிஸ்தான் அணியின் புதிய சுழற்பந்து வீச்சாளர் உஸ்மான் தாரிக்கின் பந்துவீச்சு முறை குறித்து ஹர்பஜன் சிங் சந்தேகம் எழுப்பியிருந்தார். ஐஎல்டி20 தொடரின் போது தாரிக்கை பேட்டி கண்ட ஹர்பஜன், அவரது பந்துவீச்சு பாணியைக் கிண்டல் செய்வது போலப் பேசியிருந்தார். இதற்குக் கண்டனம் தெரிவித்த தன்வீர் அகமது, ஹர்பஜன் சிங்கை விமர்சித்திருந்தார். மேலும், ஹர்பஜன் சிங் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்கக் கூடாது என கூறிவிட்டு எப்போதும் வர்ணனை செய்யும் போது பாகிஸ்தான் வீரர்களுடன் சுற்றிக் கொண்டு இருக்கிறார் எனவும் குற்றம் சுமத்தி இருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்ட ஹர்பஜன் சிங், தன்வீர் அகமதை ஒரு 'துச்சமான மனிதன்' என்று கடுமையாகச் சாடினார். வார்த்தைகளை அளந்து பேசுமாறும் எச்சரித்திருந்தார். அதில் அவர் கூறியிருந்தது இதுதான் -
"என்னைப் பற்றி அவதூறாகப் பேசி வரும் ஒரு 'துச்சமான மனிதருக்காக' இந்த வீடியோவை வெளியிடுகிறேன். உண்மையைச் சொல்லப்போனால் அவர் யார் என்றே எனக்குத் தெரியாது. ஆனால், அவ்வப்போது ஏதோ ஒரு சமூக வலைதளத்தில் அவர் நாடகம் ஆடுவதைப் பார்க்கிறேன். முதலில் அவர் யார் என்று எனக்குத் தெரிய வேண்டும். பாகிஸ்தானுக்காக வெறும் 3-4 போட்டிகளில் விளையாடிவிட்டு, ஏதோ இம்ரான் கான், வாசிம் அக்ரம் அல்லது வக்கார் யூனிஸ் போல அவர் பாவனைய செய்கிறார். வெட்கக்கேடு!"
"நான் ILT20 தொடரில் ஒளிபரப்பாளராக பணியாற்றி வருகிறேன். ஒரு ஒளிபரப்பாளரின் வேலை என்ன? ஆட்டநாயகன் விருது பெறுபவரிடம் கேள்வி கேட்பதுதானே? பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் உஸ்மான் தாரிக் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருது வென்றார். அவரிடம் நான் கேள்வி கேட்டதில் இவருக்கு என்ன பிரச்சனை? நான் அவரிடம் பேசாமல் இருந்திருந்தால், 'அவர் பாகிஸ்தான் வீரர் என்பதால் ஹர்பஜன் பேசவில்லை' என்று இதே ஆள் புகார் கூறியிருப்பார். எங்கு பாகிஸ்தான் வீரர்களைப் பார்த்தாலும் நான் அவர்களைச் சுற்றி வருவதாக அவர் கூறுகிறார்"
பாகிஸ்தான் உருவாக்கிய சிறந்த கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் மதிக்கத்தக்கவர்கள் என்றும், ஆனால் தன்வீர் அகமது போன்றவர்கள் புகழுக்காகத் தொலைக்காட்சிகளில் அமர்ந்து கொண்டு தரம் தாழ்ந்து பேசுவதாகவும் ஹர்பஜன் சாடினார்.
அவர் மேலும் கூறுகையில்: "நல்ல கவனமாகக் கேள். நீ யார் என்பதே எனக்குத் தெரியாது. பாகிஸ்தானின் ஜாம்பவான்கள் யாரும் இப்படிப் பேசுவதில்லை. அவர்களுக்கு மரியாதை தெரியும். ஆனால், உன்னைப் போன்ற எதையும் சாதிக்காத நபர்கள், மலிவான சேனல்களில் அமர்ந்து கொண்டு அபத்தமாகப் பேசுகிறார்கள். உனக்கு எப்படிப் பேச வேண்டும் என்ற நாகரிகம் கூடத் தெரியவில்லை. இதுதான் 5 போட்டிகளில் விளையாடிய வீரருக்கும், 100 போட்டிகளில் விளையாடிய வீரருக்கும் உள்ள வித்தியாசம்" என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஹர்பஜனின் இந்த ஆவேசமான வீடியோவுக்குப் பதிலளிக்கும் வகையில்தான் தன்வீர் தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஹர்பஜன் சிங்கை இரண்டு முகம் கொண்ட வேடதாரி என்று கூறி இருக்கிறார். இதுகுறித்து அவர் பேசுகையில், "நீ ஒரு பக்கம் வர்ணனை செய்கிறாய். மறுபக்கம், உஸ்மான் தாரிக்கை நான் புறக்கணிப்பேன் என்று ஒளிபரப்பாளர்களிடம் கூறுகிறாய். நீயெல்லாம் இரண்டு முகம் கொண்ட வேடதாரி.
இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க வேண்டாம் என்று கூறுகிறாய். ஆனால் நீ மட்டும் பாகிஸ்தான் வீரர்களுடன் அமர்ந்து வர்ணனை செய்கிறாய். நீ ஒரு நேர்மையான ஆளாக இருந்தால், நான் பாகிஸ்தான் வீரர்களுடன் நிற்க மாட்டேன், பேச மாட்டேன், கைகுலுக்க மாட்டேன் என்று வெளிப்படையாகச் சொல்லியிருக்க வேண்டும்" என்று தன்வீர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், "எனக்கு நாகரிகம் இல்லை என்று நீ சொல்கிறாய். ஆனால் முதலில் உன்னைப் பார். என்னை விட நீதான் அதிக கிரிக்கெட் விளையாடியிருக்கிறாய். இப்போது உன்னுடைய நாகரிகத்தைப் பற்றிச் சொல். நீ பயன்படுத்திய வார்த்தைகளை நான் உன்னைப் பற்றி ஒருபோதும் பேசியதில்லை. இந்த முறை நான் பொறுமையாகவும், மரியாதையாகவும் இருக்கிறேன். ஆனால் மீண்டும் இதுபோன்று பேசினால், நான் அமைதியாக இருக்க மாட்டேன். என்னுடைய நாகரிகம் என்ன, என்னிடம் நாகரிகம் இருக்கிறதா இல்லையா என்பதை உனக்குக் காட்டுகிறேன். இதை நினைவில் வைத்துக்கொள்" என்று தன்வீர் எச்சரிக்கும் வகையில் பேசி இருக்கிறார்.
இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு முன்னதாக, இரு நாட்டு முன்னாள் வீரர்களும் இப்படி வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருவது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.