மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் நடந்த விவாத நிகழ்ச்சி ஒன்றில் ஹர்பஜன் சிங், விராட் கோலியைத் தாக்கும் வகையில் கருத்து ஒன்றை தெரிவித்தார். இதை அடுத்து விராட் கோலியின் ரசிகர்கள் அவர் சொன்னது தவறு எனப் பல்வேறு பதிவுகளையும் வெளியிட்டு வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட்டில் அதிக ரசிகர்களைக் கொண்ட இரண்டு வீரர்களாக இருப்பவர்கள் விராட் கோலி மற்றும் தோனி. தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று ஆறு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், இப்போதும் அவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆடுகளத்திற்கு வந்தால் ரசிகர்கள் விண்ணை எட்டும் அளவுக்கு கோஷம் எழுப்பி வருகின்றனர்.

விராட் கோலி தற்போது கிரிக்கெட் விளையாடி வரும் நிலையில், அவருக்கான ரசிகர்களும் அதிக அளவில் உள்ளனர். தற்போது தோனி மற்றும் விராட் கோலிக்கு மைதானங்களில் சரிசமமாக ரசிகர்கள் இருக்கின்றனர்.
இந்த நிலையில், ஹர்பஜன் சிங் ஐபிஎல் தொடரில் தோனியின் எதிர்காலம் குறித்துப் பேசிக் கொண்டிருந்தபோது முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசினார். தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 43 வயதான நிலையிலும் ஆடுவதற்கு என்ன காரணம் என விவரித்த அவர் கூறியிருப்பதாவது:
"தோனி எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் விளையாடலாம். அவர் எனது அணியில் இருந்தால், நான் வேறு விதமான முடிவை எடுப்பேன். ஆனால் ரசிகர்கள் அவர் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவருக்கு உண்மையான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். மற்றவர்கள் எல்லாம் சமூக வலைதளத்தை சார்ந்து இருக்கிறார்கள். சிலர் காசு கொடுத்து ரசிகர்களை வைத்து இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் நாம் விட்டு விடுவோம். ஏனெனில், நாம் அதை குறித்து விவாதம் செய்தோம் என்றால் இந்த பேச்சு வேறு இடத்துக்கு சென்று விடும்" என்றார்.
அப்போது அருகில் இருந்த மற்றொரு முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, "நீங்கள் இந்த அளவுக்கு உண்மையாக இருக்கக் கூடாது" என்று சொல்லிச் சிரித்தார். அதற்கு ஹர்பஜன் சிங் பதிலளிக்கையில், "யாராவது ஒருவர் இத்தனை உண்மையாக இருக்க வேண்டும்" என்றார்.
இந்த பேச்சு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதை பார்த்த விராட் கோலி ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர். பலரும் விராட் கோலி மைதானத்திற்கு வரும் போது எழும் கோஷத்தை சுட்டிக்காட்டி, இது உண்மையான ரசிகர்களா இல்லை காசு கொடுத்து வாங்கப்பட்ட ரசிகர்களா என கேள்வி எழுப்பி உள்ளனர்.
மேலும், இந்த ஆண்டு துவக்கத்தில் விராட் கோலி ரஞ்சித் டிராபி போட்டியில் விளையாடினார். அந்தப் போட்டியை பார்ப்பதற்கு 20,000-க்கும் அதிகமான ரசிகர்கள் நேரில் வந்தனர். அதை சுட்டிக்காட்டி, அவர் ரஞ்சி டிராபி போட்டியில் விளையாடுவதைப் பார்ப்பதற்கு இத்தனை ரசிகர்கள் வந்திருக்கும் நிலையில் இவர்களும் காசு கொடுத்து வாங்கப்பட்டவர்களா என கேள்வி எழுப்பி உள்ளனர்.
அதே சமயம் சிலர், விராட் கோலியின் சமூக வலைதள பக்கங்களை பின்பற்றுபவர்களில் பெரும்பாலும் 'பாட்கள்' (Bots - போலி கணக்குகள்) என சுட்டிக்காட்டி, அதைத்தான் ஹர்பஜன் சிங் இவ்வாறு கூறுகிறார் என விவரித்துள்ளனர். தோனி சமூக வலைதளத்தில் அதிக பதிவுகளை வெளியிடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.