கொச்சி: 17 ஆண்டுகளுக்கு முன்பு ஐபிஎல் தொடரில் நடந்த 'ஸ்லாப்கேட்' சம்பவத்தின் வீடியோவை, ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஸ்ரீசாந்தின் மனைவி புவனேஸ்வரி, லலித் மோடி மற்றும் மைக்கேல் கிளார்க்கை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். "இந்த மனிதாபிமானமற்ற, இதயமற்ற செயலுக்காக வெட்கப்படுங்கள்" என்று அவர் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
2008 ஐபிஎல் தொடரின்போது, ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்தைக் கன்னத்தில் அறைந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இத்தனை ஆண்டுகளாக அந்தச் சம்பவத்தின் உண்மையான வீடியோ வெளியாகாமல் இருந்த நிலையில், லலித் மோடி சமீபத்தில் ஒரு போட்காஸ்ட் நிகழ்ச்சியில் அதை வெளியிட்டார்.

இந்தச் செயல், சம்பந்தப்பட்ட வீரர்களின் குடும்பத்தினரை மீண்டும் ஒருமுறை காயப்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஸ்ரீசாந்தின் மனைவி புவனேஸ்வரி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ச்சியான பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
அவர் தனது பதிவில், "லலித் மோடி மற்றும் மைக்கேல் கிளார்க், நீங்கள் வெட்கப்பட வேண்டும். உங்களின் மலிவான விளம்பரத்திற்காகவும், வியூஸ்களுக்காகவும் 2008-ல் நடந்த ஒரு சம்பவத்தை இப்போது மீண்டும் இழுத்து வந்திருக்கிறீர்கள். ஸ்ரீசாந்த் மற்றும் ஹர்பஜன் சிங் இருவரும் அந்தச் சம்பவத்திலிருந்து நீண்ட காலத்திற்கு முன்பே வெளியே வந்துவிட்டனர்."
"இருவருமே இப்போது பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் தந்தையர்களாக இருக்கிறார்கள். ஆனாலும், பழைய காயத்தைக் கிளறி அவர்களை மீண்டும் வேதனைப்படுத்தப் பார்க்கிறீர்கள். இது முற்றிலும் அருவருப்பானது, இதயமற்றது மற்றும் மனிதாபிமானமற்றது" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும் அவர், "ஸ்ரீசாந்த், தன் வாழ்வில் எதிர்கொண்ட அனைத்துக் கஷ்டங்களையும் கடந்து, கண்ணியத்துடனும் மரியாதையுடனும் தனது வாழ்க்கையை மீண்டும் கட்டமைத்துள்ளார். அவரது மனைவியாகவும், அவரது குழந்தைகளின் தாயாகவும், 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தச் சம்பவம் மீண்டும் திரையில் வருவதைப் பார்ப்பது எங்கள் குடும்பத்திற்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது."
"நீங்கள் வியூஸ்களைப் பெறுவதற்காக, பல ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட ஒரு வேதனையை எங்கள் குடும்பங்கள் மீண்டும் அனுபவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இது வீரர்களை மட்டுமல்ல, அவர்களின் அப்பாவி குழந்தைகளையும் பாதிக்கிறது. எந்தத் தவறும் செய்யாத அவர்கள், இப்போது கேள்விகளுக்கும் அவமானத்திற்கும் முகம் கொடுக்க வேண்டியுள்ளது" என்று வேதனை தெரிவித்துள்ளார்.
"இப்படிப்பட்ட மலிவான, மனிதாபிமானமற்ற செயலைச் செய்ததற்காக உங்கள் மீது வழக்குத் தொடர வேண்டும். கடவுளுக்குப் பயந்து நடங்கள்" என்றும் ஸ்ரீசாந்தின் மனைவி புவனேஸ்வரி தனது பதிவில் காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீசாந்தும் தனது மனைவியின் இந்தப் பதிவுகளைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். காலத்தால் புதைக்கப்பட்ட ஒரு கசப்பான சம்பவத்தை, சுயலாபத்திற்காக மீண்டும் தோண்டி எடுப்பது சரியா? என்ற விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது இந்த சம்பவம்.