மும்பை: இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் செர்பிய நடிகை நடாஷா ஸ்டான்கோவிக் இருவரும் குடும்ப வாழ்க்கையில் இருந்து பிரிய உள்ளதாக அறிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களாகவே சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வந்த நிலையில், ஹர்திக் பாண்டியா அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும், செர்பியாவைச் சேர்ந்த நடிகை நடாஷா ஸ்டான்கோவிக் இருவரும் 2020ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடாஷா ஸ்டான்கோவிக், தமிழில் அரிமா நம்பி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். அதேபோல் பல்வேறு விளம்பரங்களில் நடித்துள்ளார்.

பார்ட்டி ஒன்றில் சந்தித்த இருவரும் சில மாதங்கள் நட்பில் இருந்து, பின்னர் காதலர்களாக மாறினர். இதன்பின் இருவரும் "Living Together" உறவில் இருந்த போது, நடாஷா கர்ப்பமானார். அதன்பின் இவர்கள் இருவரும் 2020ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் இவர்களுக்கு 2020ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.
அந்த குழந்தைக்கு அகஸ்தியா என்று பெயரிட்டு இருவரும் வாழ்ந்து வந்தனர். திருமணத்திற்கு பின் ஹர்திக் பாண்டியா விளையாடும் போட்டிகளுக்கு நேரில் வரத் தொடங்கினார் நடாஷா. இருவரும் நட்சத்திர தம்பதிகளாக வாழ்ந்து வந்த சூழலில், ஐபிஎல் தொடரின் போது நடாஷா மைதானத்திற்கு வரவே இல்லை. அதேபோல் இன்ஸ்டாகிராமில் திருமண புகைப்படங்களை நடாஷா நீக்கினார்.
இதனால் ஹர்திக் பாண்டியா - நடாஷா இருவரும் பிரிய உள்ளதாக தகவல் வெளியாகின. இதுதொடர்பாக இரு தரப்புமே எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் இன்று காலை நடாஷா தனது மகன் அகஸ்தியாவுடன் செர்பியாவுக்கு பறந்தார். தற்போது ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடாஷாவை பிரிய உள்ளதாக அறிவித்துள்ளார்.

அதில், 4 ஆண்டுகள் குடும்ப வாழ்க்கைக்கு பின், நானும் நடாஷாவும் பரஸ்பரமாக பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். இருவருமே இணைந்திருப்பதற்கான அனைத்து முயற்சிகளை செய்தோம். ஆனால் தற்போது இருவருக்குமே பிரிவதே சிறந்த முடிவு என்று புரிகிறது. எங்களோ இருவரும் இது கடினமான முடிவு தான். இந்த 4 ஆண்டுகளில் எங்கள் இடையில் இருந்த மகிழ்ச்சி, மரியாதை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளோம்.
நாங்கள் இருவரும் மகன் அகஸ்தியாவால் ஆசீர்வதிக்கப்பட்டோம். எங்கள் வாழ்க்கையின் முக்கிய அங்கமாக அகஸ்திரியா இருப்பார். அவரின் மகிழ்ச்சிக்காக அனைத்தையும் நாங்கள் வழங்க உறுதியாக இருக்கிறோம். இந்த கடினமான நேரத்தில் எங்களின் தனியுரிமையை மதித்து, ஆதரவை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.