குயானா: ஐபிஎல் தொடரில் குஜராத் அணி அறிமுகமான முதல் தொடரிலேயே ஹர்திக் பாண்டியா தலைமையில் கோப்பையை வென்றது. இதனால் இந்திய அணியின் அடுத்த கேப்டன் ஹர்திக் பாண்டியா தான் என்று ரசிகர்கள் பேச தொடங்கினார்கள்.
அதன்பின் டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்த, சீனியர் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர். அதன்பின் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளைஞர்கள் மையப்படுத்தி இந்திய அணி உருவாக்கப்பட்டது. சில தொடர்களில் மட்டுமே ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி விளையாடியது.

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி பங்கேற்றுள்ளது. இதன் 2வது போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியே முக்கிய காரணமாக உள்ளது. டாஸ் தொடங்கி இறுதி ஓவர் வரை மொத்தமாக தவறான முடிவுகளை ஹர்திக் பாண்டியா எடுத்தார்.
இதனால் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை ரசிகர்கள் பொளந்து கட்டி வருகின்றனர். ஹர்திக் கொஞ்சம் கூட சுய சிந்தனையில்லாமல் அணி நிர்வாகத்தின் பேச்சை அப்படியே களத்தில் செயல்படுத்துவதால் வரும் விளைவு தான் இந்திய அணி தோல்வியடைவது என்று விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா கேப்டன்சி குறித்து நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் சாஹல் பேசுகையில், தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் கேப்டன்சியில் பெரிய மாற்றங்கள் இல்லை. இவர்கள் நான்கு பேரும் ஒரே குடும்பத்தில் பிறந்த சகோதரர்கள் எப்படி இருப்பார்களோ, அதேபோல் தான் கேப்டன்சியில் இருக்கிறார்கள்.
இவர்களில் மூத்தவராக தோனியையும், அடுத்தடுத்த சகோதரராக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவும் இருக்கிறார்கள். இவர்களுக்கு கடைசி தம்பியாக ஹர்திக் பாண்டியா இருக்கிறார். கிட்டத்தட்ட தோனியை போல் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சாளர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கிறார் என்று பாராட்டியுள்ளார்.
ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை பலரும் காட்டமாக விமர்சித்து வரும் நிலையில், அவரின் கேப்டன்சியை இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான தோனியின் கேப்டன்சியோடு ஒப்பிட்டு சாஹல் பேசியுள்ளது ரசிகர்களிடையே கூடுதல் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.