ஐதராபாத்: சையது முஸ்டாக் அலி கிரிக்கெட் தொடரில் காயம் காரணமாக இரண்டு மாதங்கள் ஓய்வில் இருந்த இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கம்பேக் கொடுத்து அசத்தியிருக்கிறார். ஆசிய கோப்பை சூப்பர் ஃபோர் சுற்றில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் ஏற்பட்டது.
இதனை அடுத்து அவர் அந்த போட்டிகளில் இருந்து பாதியில் வெளியேறினார். அதன் பிறகு தொடர்ந்து ஓய்வில் இருந்த ஹர்திக் பாண்டியா, பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தில் ஒரு மாதம் தங்கி பயிற்சி செய்தார். தற்போது உடல் தகுதி எட்டியுள்ள ஹர்திக் பாண்டியா,சையது முஸ்தாக் அலி கிரிக்கெட் தொடரில் திரும்பி இருக்கிறார்.

ஹைதராபாத்தில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா பங்கேற்றார். டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதில் ஹர்திக் பாண்டியா முதலில் பந்து வீசினார் ஆனால் அபிஷேக் ஷர்மா தொடக்க வீரராக களமிறங்கி வழக்கம் போல் ருத்ரதாண்டவம் ஆடினார்.
இதனால் ஹர்திக் பாண்டியாவின் எக்னாமிக் கொஞ்சம் அதிகமாக மாறியது. 19 பந்துகளில் 50 ரன்கள் விளாசிய அபிஷேக் ஷர்மா ஐந்து பவுண்டரி, நான்கு சிக்ஸர்களை அடித்தார். இதைப் போன்று அன்மோல்பிரிட் சிங் 32 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார். இதில் 7 பவுண்டரி, நான்கு சிக்ஸர்கள் அடங்கும். நமன் தீர் 28 பந்துகளில் 39 ரன்களும், நெஹல் வதேரா 12 பந்துகளில் 16 ரன்களும் எடுத்தனர்.
இதன் காரணமாக பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்திருந்தது. ஹர்திக் பாண்டியா நான்கு ஓவர்கள் வீசி 52 ரன்கள் விட்டுக் கொடுத்து, ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதனை அடுத்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பரோடா அணி களமிறங்கியது. இதில் மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஹர்திக் பாண்டியா சிவாலிக் சர்மா உடன் இணைந்து 101 ரன்கள் சேர்த்தார்.
தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் 42 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார். இதில் நான்கு சிக்ஸர்கள்,ஏழு பவுண்டரிகள் அடங்கும். இதன் மூலம் 224 ரன்கள் என்ற இலக்கை 5 பந்துகள் எஞ்சிய நிலையில் பரோடா அணி வெற்றிக்கரமாக துரத்தியது. ஹர்திக் பாண்டியா கடைசி வரை 183 ஸ்ட்ரைக் ரேட் உடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் ஹர்திக் பாண்டியா மாஸ் கம்பேக்கை கொடுத்திருக்கிறார். இதனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஹர்திக் பாண்டியா விளையாடுவார் என எதிர்பார்க்கலாம்.