“அவர்களுக்கு எங்கள் உடல்மொழியே போதும்”.. இலங்கையுடனான முதல் டி20.. ஹர்திக் பாண்ட்யா துணிச்சல் சவால்!
மும்பை: இலங்கை அணியுடனான டி20 கிரிக்கெட் தொடரை வெல்வது குறித்து இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேசியுள்ள வார்த்தைகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. இதில் முதல் டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2023ம் ஆண்டின் முதல் போட்டியான இதில் இந்திய அணி வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்ற ஆவலுடன் காத்துள்ளது. ஹர்திக் பாண்ட்யா தனது கேப்டன்சி திறமையை உலகிற்கு காட்டும் வாய்ப்பாக இது அமைந்துள்ளது.

முதல் டி20 போட்டி
மற்றொருபுறம் இலங்கையிடம் தீர்க்கப்படாத கணக்கு ஒன்றும் இந்திய அணிக்கு உள்ளது. ஆசியகோப்பை தொடரில் இந்திய அணியை வீழ்த்தி நாக் அவுட் செய்தது இலங்கை தான். எனவே அதற்கு பதிலடி தர வேண்டும். அதுவும் இந்திய அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், பண்ட், ஷமி போன்ற முன்னணி வீரர்கள் யாருமே இன்றி இளம் படையுடன் களமிறங்குகிறது.

ஹர்திக் பதில்
இந்நிலையில் இதுகுறித்து கேப்டன் பாண்ட்யா பேசியுள்ளார். அதில், எந்தவித பதிலடியையும் கொடுக்க நாங்கள் நினைக்கவில்லை. ஒரு நல்ல கிரிக்கெட்டை ஆட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இருக்கிறோம். ஆனால் ஒன்றை மட்டும் அழுத்தமாக கூறுவேன். இந்தியாவில் இந்திய அணியால் என்ன செய்ய முடியும் என்பதை உணரவைப்போம்.

முதல் திட்டம்
நாங்கள் அவர்களை வெறுப்பேற வைக்க தேவையே கிடையாது. எங்களின் உடல்மொழியே போதும், அவர்களை பதற்றமடைய செய்துவிடும். ஆசிய கோப்பையில் எந்தெந்த வீரர்கள் இந்தியாவை வெளியேற்ற காரணம் என்பதை நன்கு அறிவேன். அவர்களை இன்று தடுத்து நிறுத்துவது தான் எனது முதல் பணி என ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.

வானவேடிக்கை தயார்
இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி மும்பை வான்கடேவில் நடைபெறுகிறது. இந்த மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு நல்ல ஒத்துழைப்பை தரக்கூடிய ஒன்று என்பதால், அதிக ஸ்கோர் மேட்ச்-ஆக இது அமையலாம். இதே போல மும்பை அணிக்காக ஹர்திக் பாண்ட்யா மற்றும் இஷான் கிஷன் அதிக முறை விளையாடிய மைதானம் இதுவாகும். எனவே அவர்களின் மிரட்டல் அடிகளை இங்கு பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications