மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, தனது முன்னாள் மனைவி நடாசா ஸ்டான்கோவிச் மற்றும் மகன் அகஸ்தியாவுக்கு மிகவும் விலையுயர்ந்த சொகுசு காரை பரிசாக வழங்கியுள்ளார். விவாகரத்துக்குப் பிறகும் இவர்கள் இருவரும் தங்கள் மகனுக்காக இணைந்து செயல்படும் விதம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவின் செயலை பாராட்டி வருகின்றனர்.
ஹர்திக் பாண்டியா தனது மகனுக்கும் முன்னாள் மனைவிக்கும் சுமார் 3 முதல் 4 கோடி ரூபாய் மதிப்பிலான லேண்ட் ரோவர் டிஃபெண்டர் என்ற சொகுசு காரை பரிசளித்துள்ளார். மும்பையைச் சேர்ந்த பிரபல கார் விற்பனை நிறுவனம், இந்த கார் வழங்கும் நிகழ்வின் புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது. அந்தப் புகைப்படங்களில் நடாசா மற்றும் அவரது மகன் அகஸ்தியா ஆகியோர் அந்த கருப்பு நிற சொகுசு காருடன் நிற்பதைக் காண முடிகிறது.
அந்த வாகன விற்பனை நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், "ஹர்திக் பாண்டியா மீண்டும் ஒருமுறை தனது டிஃபெண்டர் காரை வாங்குவதற்காக எங்கள் நிறுவனத்தைத் தேர்வு செய்துள்ளார். இது நம்பிக்கையின் அடிப்படையில் உருவான உறவு. அகஸ்தியா பாண்டியா மற்றும் நடாசா ஸ்டான்கோவிச் ஆகியோரிடம் இந்த கார் மும்பையில் ஒப்படைக்கப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹர்திக் பாண்டியா மற்றும் நடாசா இருவரும் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முறைப்படி விவாகரத்து பெற்றுப் பிரிந்தனர். பிரிந்து இரண்டு ஆண்டுகள் ஆகப்போகும் நிலையிலும், தங்கள் மகன் அகஸ்தியாவின் வளர்ப்பில் இருவரும் தொடர்ந்து சமமான பொறுப்பை ஏற்றுச் செயல்பட்டு வருகின்றனர். ஹர்திக் பாண்டியா தனது தனிப்பட்ட வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தாலும், தனது மகனுக்கு எப்போதுமே முன்னுரிமை அளித்து வருவது இந்தச் செயலின் மூலம் வெளிப்பட்டுள்ளது.
ஹர்திக் பாண்டியா தற்போது நடிகை மாஹிகா சர்மாவுடன் தொடர்பில் இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் மாஹிகாவின் 25வது பிறந்தநாளுக்கு ஹர்திக் வெளியிட்ட பதிவு இதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்தது. மறுபுறம் நடாசா தனது உடல் தகுதியில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில், தனது வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் தன்னை வலிமையாக்கியுள்ளதாகவும், மீண்டும் ஒரு புதிய உறவை ஏற்கத் தான் தயாராக இருப்பதாகவும் அவர் வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார்.
கணவன் மனைவியாகப் பிரிந்தாலும், ஒரு நல்ல பெற்றோராகத் தங்களது கடமையை இவர்கள் இருவரும் சிறப்பாகச் செய்து வருவது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. மகனுக்காகப் பாண்டியா செய்துள்ள இந்தச் செயல் சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.