என்னமா இப்படி பண்றீங்களேமா?.. இந்திய அணிக்கு தலைவலியை தந்த சுப்மன் கில்.. ஹர்திக் தந்த உடனடி தீர்வு!
சென்னை: ஆஸ்திரேலிய அணியுடனான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி சிக்கலில் இருந்து தப்பிக்க கிடைத்த வாய்ப்பை மீண்டும் ஒருமுறை சுப்மன் கில் நாசமாக்கியுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி சென்னையில் நடைபெற்றது. இரு அணிகளும் தலா 1 வெற்றியுடன் சமநிலையில் இருந்ததால் தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இரு அணிகளும் களமிறங்கின.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய அந்த அணிக்கு இந்த முறையும் சிறப்பான பேட்டிங் அமைந்தது.

3வது போட்டி
இந்திய அணிக்கு கடந்த 2 போட்டிகளிலும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தது ஓப்பனிங் வீரர் மிட்செல் மார்ஷ் தான். முதல் பந்தில் இருந்தே அதிரடியாக ஆடும் அவர் 2 போட்டிகளிலும் அரைசதம் அடித்திருந்தார். அந்த ஃபார்மை 3வது போட்டியிலும் தொடர்ந்து காட்டினார். ஓப்பனிங் களமிறங்கிய டிராவிஸ் ஹெட் - மிட்செல் மார்ஷ் ஆகியோர் அதிரடியாக ரன் குவித்தனர். இதனால் 10.5 ஓவர்களில் ஒரு விக்கெட் கூட இல்லாமல் 68 ரன்களை குவித்தது.

ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்
டேஞ்சர் வீரர் மிட்செல் மார்ஷ் மீண்டும் ஒருமுறை அரைசதத்தை நோக்கி சென்றார். மறுபுறம் ஹெட் 33 ரன்களை அடித்திருந்தார். இதனால் எப்படியாவது விக்கெட் எடுக்க வேண்டும் என ஹர்திக் பாண்ட்யா பவுலிங்கிற்கு வந்தார். அதற்கேற்றார் போல முதல் ஓவரிலேயே வாய்ப்பு அமைந்தது. பாண்ட்யா வீசிய 3வது பந்து ஷார்ட் பாலாக சென்றது. அதனை ஹெட் மடக்கி அடிக்க, பந்து நேராக பவுண்டரிக்கு அருகில் நின்றிருந்த சுப்மன் கில்லிடம் சென்றது.

துரதிஷ்டவசம்
பந்தை நோக்கி சரியாக டைவ் அடித்து வந்த சுப்மன் கில் சுலபமாக அந்த கேட்ச்-ஐ பிடித்திருக்கலாம். ஆனால் கைகளை சரியாக வைக்காததால் கேட்ச் மிஸ்ஸாகி பவுண்டரிக்கு சென்றுவிட்டது.கடந்த போட்டிகளிலும் சுப்மன் கில் சரிவர ஃபீல்டிங் செய்யாமல் கேட்ச்-களை விட்டது பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியிருந்தது. இதனால் அவர் மீது விமர்சனங்கள் எழத்தொடங்கியுள்ளன.

சரிசெய்த பாண்ட்யா
எனினும் கில்லின் தவறை உடனடியாக சரிசெய்துக்கொடுத்தார் பாண்ட்யா. அந்த ஓவரிலேயே 5வதாக வீசிய குட் லெந்த் பந்தை டிராவிஸ் ஹெட் தூக்கி அடிக்க நினைத்தார். எனினும் பந்தில் வேகம் இல்லை என்பதால் நேராக குல்தீப் யாதவிடம் கேட்ச் சென்றது. இதனால் ஆஸ்திரேலிய அணி ஒருவழியாக 68 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது.


Click it and Unblock the Notifications