இந்திய டி20 அணி கேப்டனாகும் ஹர்திக் பாண்ட்யா.. அதுவும் முழு நேர கேப்டன்.. பிசிசிஐ-ன் திடீர் முடிவு!
மும்பை: இந்திய டி20 கிரிக்கெட் அணியின் முழு நேர கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்படவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தற்போது இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை நடைபெற்றுள்ள 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளது.
இன்று நடைபெறும் 4வது லீக் போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தினால் தான் அரையிறுதி வாய்ப்பு என்ற சூழலில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத விஷயத்தை பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது.

கேப்டன்சி விவகாரம்
அதாவது நடப்பு டி20 உலகக்கோப்பை தொடர் முடிவதற்கு முன்னதாகவே இந்திய அணியின் அடுத்த கேப்டன் குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. ரோகித் சர்மாவுக்கு 35 வயதாகிவிட்டதால், இனி அவர் தொடர்ச்சியாக விளையாடுவது கடினமான ஒன்று தான். 2024ம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை அணிக்கு ஹர்திக் பாண்ட்யா தான் கேப்டனாக தயார் செய்யப்படவுள்ளார்.

ரோகித் எப்போது ஓய்வு?
அதற்காக ரோகித் சர்மா உடனடியாக பதவி விலகப்போவதில்லை. 2023ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு ரோகித் சர்மா தான் கேப்டனாக இருப்பார். அதில் கவனம் செலுத்துவதற்காகவே டி20 கிரிக்கெட்டில் இருந்து இன்னும் சில மாதங்களில் அவர் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அவரால் 3 வடிவ அணியையும் இனி சமாளிப்பது கடினமாக இருக்கலாம்.

கோலிக்கு அறிவுரை
ரோகித் சர்மாவை போன்றே விராட் கோலியும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்காக அறிவுறுத்தப்பட்டு வருகிறார். 34 வயதாகும் விராட் கோலிக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதால், இனி ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துமாறு அவருக்கு பிசிசிஐ அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

50 ஓவர் அணி கேப்டன்
இதன் மூலம் ஐபிஎல் தொடரில் கோப்பை வென்று கொடுத்த ஹர்திக் பாண்ட்யா மீது பிசிசிஐ அதிக நம்பிக்கை வைத்துள்ளது தெரியவந்துள்ளது. இதே போல ரோகித் சர்மாவுக்கு பின்னர் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் தான் இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications