துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக கடைசி நேரத்தில் விலகினார். இதன் மூலம் இந்திய அணி பந்துவீச்சில் ஆரம்ப கட்டத்தில் தடுமாறியது.
ஹர்திக் பாண்டியா சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இலங்கை அணிக்கு எதிராக விளையாடும் போது காயமடைந்து விட்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தான் இறுதிப் போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் வரும் அக்டோபர் 19ஆம் தேதி தொடங்க உள்ள ஆஸ்திரேலியா தொடரில் ஹர்திக் பாண்டியா பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

காயத்தின் அளவு எதிர்பார்த்ததை விட மிகவும் அதிகம் என்பதால், அவர் நான்கு வாரம் ஓய்வில் கண்டிப்பாக இருக்கவேண்டும் என்று மருத்துவ குழுவினர் தெரிவித்திருக்கின்றனர். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் ஹர்திக் பாண்டியா பங்கேற்க மாட்டார்.
அக்டோபர் 29ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுகிறது. இந்த போட்டிக்குள் ஹர்திக் பாண்டியா முழு உடல் தகுதியை பெற்று விட்டால், அவர் அணியில் சேர்க்கப்படலாம் என தெரிகிறது. பெரும்பாலும் ஹர்திக் பாண்டியாவுக்கு ஆஸ்திரேலியா தொடரில் வாய்ப்பு இருக்காது என்று தான் தெரிகிறது.
இன்னும் அதனை தொடர்ந்து நடைபெற உள்ள தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஹர்திக் பாண்டியா அணியில் சேரலாம். ஆசிய கோப்பை தொடரில் ஆறு போட்டியில் விளையாடியுள்ள ஹர்திக் பாண்டியா மொத்தமாக நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். பேட்டிங்கில் மொத்தமாக 48 ரன்கள் அடித்திருந்தார்.
சூப்பர் ஃபோர் சுற்றில் வங்கதேசத்துக்கு அணிக்கு எதிராக ஹர்திக் பாண்டியா 38 ரன்கள் அடித்திருந்தார். இந்த நிலையில் ஆஸ்திரேலிய தொடரில் சிவம்துபே மற்றும் நிதீஷ்குமார் ரெட்டி போன்ற ஆல்ரவுண்டர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது. சிவம் துபேவின் செயல்பாடு சிறப்பாக இருந்ததால் அவருக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.