மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவின் முன்னாள் மனைவி நடாஷா ஸ்டான்கோவிக் சமூக வலைதளத்தில் திருமண உறவில் ஒருவரை ஒருவர் ஏமாற்றுவது குறித்த வீடியோ ஒன்றை லைக் செய்துள்ளார். ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா நடாஷா ஸ்டான்கோவிக் சில வாரங்களுக்கு முன்பு திருமண பந்தத்தில் இருந்து பிரிவதாக அறிவித்த நிலையில், அவர் இப்படி ஒரு வீடியோவை லைக் செய்து இருப்பது நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
அவர்கள் அனைவரும் ஹர்திக் பாண்டியா, நடாஷாவை ஏமாற்றி விட்டாரா? என்ற ரீதியில் பல்வேறு பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். 2020 ஆம் ஆண்டு ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிக் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு அகஸ்தியா என்ற மகன் இருக்கிறார்.

நான்கு ஆண்டுகள் இருவரும் ஒன்றாக இருந்தனர். 2023இல் இருவரும் மீண்டும் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர். அது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், 2024 டி20 உலகக் கோப்பை தொடர் முடிந்த சில தினங்களில் ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிக் தங்கள் திருமண உறவில் இருந்து பிரிவதாக அறிவித்தனர்.
முதலில் நடாஷா மீது தான் தவறு என நெட்டிசன்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் சகட்டுமேனிக்கு அவரை விளாசி வந்தனர். அதன் பின் ஹர்திக் பாண்டியா சில மாடல்கள் மற்றும் நடிகைகளுடன் சுற்றித் திரிவதாக தகவல்கள் வெளியானது. அதை அடுத்து நெட்டிசன்கள் ஹர்திக் பாண்டியாவை விளாசி வந்தனர். பலர் தங்கள் பதிவுகளில் நடாஷாவிடம் மன்னிப்பும் கேட்டனர்.
இந்த நிலையில், தற்போது நடாஷா ஸ்டான்கோவிக் திருமண உறவில் ஏமாற்றுவது குறித்த வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் லைக் செய்து இருக்கிறார். அதை ரசிகர் ஒருவர் சுட்டிக்காட்டி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதை பார்த்த நெட்டிசன்கள், "இதன் மூலம் நடாஷா ஸ்டான்கோவிக் மறைமுகமாக ஹர்திக் பாண்டியா மீது தான் தவறு இருக்கிறது." என சுட்டிக்காட்டி இருப்பதாக கூறி வருகின்றனர்.
ஹர்திக் பாண்டியா சில பார்ட்டிகளில் நடிகைகளுடன் நடனமாடிய வீடியோக்கள் சமீபத்தில் வெளியாகி இருந்தன. அவற்றுடன் தற்போது நடாஷா லைக் செய்த விவகாரத்தையும் முடிச்சு போட்டு நெட்டிசன்கள் ஹர்திக் பாண்டியாவை விமர்சனம் செய்து வருகின்றனர். சமீபத்தில் ஹர்திக் பாண்டியாவின் குடும்ப நண்பர் பெயர் குறிப்பிடாமல் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஹர்திக் பாண்டியா நடாஷாவுடன் நேரம் செலவிடாமல் தனது பகட்டான வாழ்க்கை முறையில் மூழ்கி இருந்ததே பிரிவுக்கு காரணமாக இருந்தது என கூறி இருந்தார்.
ஹர்திக் பாண்டியாவை பிரிந்த நடாஷா ஸ்டான்கோவிக், மகன் அகஸ்தியாவுடன் தனது சொந்த நாடான செர்பியாவுக்கு சென்று விட்டார். ஹர்திக் பாண்டியா சமீபத்தில் இந்திய டி20 அணியின் துணை கேப்டன் பதவியை இழந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அவரது தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட பாதிப்புகள், அவரது கிரிக்கெட் வாழ்வையும் பாதித்து இருக்கிறது.
இந்த நிலையில், நடாஷா ஸ்டான்கோவிக் மறைமுகமாக ஹர்திக் பாண்டியா மீது தான் தவறு என கூறியிருப்பது, அவரது கிரிக்கெட் வாழ்வில் மேலும் சிக்கல்களை ஏற்படுத்தலாம். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியையும் கூட ஹர்திக் பாண்டியா இழக்க நேரிடலாம்.