“அவசரப்பட்டு பேசாதீங்கப்பா”.. ரவி சாஸ்திரி, கவாஸ்கர் கூறிய முக்கிய கருத்து.. ஹர்திக் தந்த பதில்!!
மும்பை: இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா கூறப்படும் நிலையில், அதுகுறித்து முதல் முறையாக பேசியுள்ளார்.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோதி வருகிறது. இதில் டி20 தொடரில் இந்தியா வெற்றி கண்டுள்ளது.
ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்து அணியை மிகவும் மோசமான முறையில் வீழ்த்தி அசத்தியிருந்தது.

நியூசிலாந்து தொடர்
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சொதப்பியதை அடுத்து ரோகித் சர்மாவை டி20 கேப்டன்சியில் இருந்து நீக்க கோரிக்கை வலுத்து வருகிறது. அவருக்கு 35 வயதும் ஆகிவிட்டதால், ஹர்திக் பாண்ட்யாவை புதிய கேப்டனாக பிசிசிஐ தேர்ந்தெடுத்துள்ளதாக தெரிகிறது. அதற்கேற்றார் போல நியூசிலாந்து தொடருக்கும் அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

கேப்டன்சி தகவல்கள்
முன்னாள் வீரர்களான சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி போன்றவர்களும் ஹர்திக் பாண்ட்யாவை அடுத்த கேப்டனாக நியமிப்பதற்கு ஆதரவு கொடுத்துள்ளனர். இந்நிலையில் அதுகுறித்து பாண்ட்யா மனம் திறந்துள்ளார். அதில், சிலர் கேப்டன் என்று கூறினால் அதற்கு மகிழ்ச்சி தான் அடைய வேண்டும். அதே சமயம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை எதுவுமே சொல்லக்கூடாது.

தன்னுடைய திட்டம்
என்னைப்பொறுத்தவரை ஒரே ஒரு விஷயம் தான் மனதில் உள்ளது. நான் ஒரு தொடருக்கு கேப்டனாக இருந்தாலும், ஒரு போட்டிக்கு இருந்தாலும் என்னுடைய வழியில் அணியை வழி நடத்துவேன். எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், தரமான கிரிக்கெட்டை வெளிப்படுத்துவேன். எதிர்காலத்தில் கேப்டன்சி வருகிறதா? இல்லையா? என்பதை பொருத்திருந்து பார்க்கலாம் என பாண்ட்யா கூறியுள்ளார்.

அடுத்த தோனி
ஏற்கனவே ஹர்திக் பாண்ட்யாவின் செயல்பாடுகள், உடற்மொழிகள் அனைத்தும் தோனியை அப்படியே பார்ப்பது போன்று உள்ளதாக வல்லுநர்கள் கூறி வருகின்றனர். ஐபிஎல்-ல் ஒரு கேப்டனாக தனது முதல் சீசனிலேயே கோப்பை வென்றுக்கொடுத்துள்ளார். இதனால் அவருக்கு அடுத்த கேப்டனாகக்கூடிய அனைத்து தகுதிகளும் இருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications