
பண்டியா காயம்
ஹர்திக் பண்டியா உலகக்கோப்பை தொடருக்குப் பின் நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் முதுகில் ஏற்பட்ட காயத்தால் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்று அதில் இருந்து அவர் மீண்டு வந்தார்.

நீண்ட ஓய்வு
கடந்த நான்கு மாதமாக ஓய்வில் இருந்த அவர் உடற்தகுதி பெரும் பயிற்சிகளை செய்து வந்தார். இந்த நிலையில், அடுத்து நடைபெற இருக்கும் நியூசிலாந்து தொடரில் இந்திய அணியில் அவர் பங்கேற்பார் என கூறப்பட்டது.

பயிற்சிப் போட்டிகள்
இந்தியா ஏ அணி நியூசிலாந்து சென்று அங்கே போட்டிகளில் பங்கேற்று நியூசிலாந்து தொடருக்கு முன்னதாக பயிற்சியில் ஈடுபட உள்ளது. அந்த அணியில் பண்டியாவும் இடம் பெறுவார் என கூறப்பட்டது.

கசிந்த தகவல்
ஆனால், திடீரென ஹர்திக் பண்டியா உடற்தகுதி பரிசோதனையில் தோல்வி அடைந்து, நியூசிலாந்து செல்லும் இந்தியா ஏ அணியில் இடம் பெற தவறி விட்டதாக ஒரு தகவல் பரவியது.

உடற்தகுதி தேர்வு நடக்கவில்லை
ஆனால், உண்மையில் பண்டியாவுக்கு எந்த உடற்தகுதி தேர்வும் நடைபெறவில்லை என தெரிய வந்துள்ளது. பிசிசிஐ பண்டியாவுக்கு எந்த உடற்தகுதி பரிசோதனையும் நடத்தவில்லை.

பண்டியா தயார்
மேலும், ஹர்திக் பண்டியா உடற்தகுதியில் சிறப்பாக இருப்பதாகவே தெரிகிறது. ஆனால், அவராகவே நியூசிலாந்து தொடரில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டுள்ளதாக கொண்டுள்ளார். அவரை இப்போதைக்கு கிரிக்கெட் போட்டிகளில் ஆட வேண்டாம் என தடுத்தது அவரது உடற்பயிற்சி நிபுணர் ரஜினிகாந்த் என தெரிய வந்துள்ளது.

நிபுணர் கருத்து
ஹர்திக் பண்டியாவின் உடற்பயிற்சி நிபுணர் ரஜினிகாந்த் இது பற்றி பேசினார். அவர் கூறுகையில் பண்டியா உடற்தகுதி அளவில் சிறப்பாக இருப்பதாகவும், ஆனாலும், சர்வதேச அளவில் பந்துவீச்சு சுமையை தாங்கும் அளவுக்கு அவர் தயாராகவில்லை என குறிப்பிட்டார்.

உடற்தகுதியுடன் இருக்கிறார்
"அவர் 100% உடற்தகுதியுடன் இருக்கிறார். அது பற்றி எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அவர் அடுத்தடுத்த சர்வதேச போட்டிகளில் அதிக பணிச்சுமையில் சிக்குவதை நான் விரும்பவில்லை. அவருக்கு எந்த உடற்தகுதி தேர்வும் நடைபெறவில்லை. அவர் அதில் தோல்வி அடைந்தாரா? என்ற கேள்வியே இல்லை" என்றார்.

காரணம் என்ன?
நியூசிலாந்து செல்லும் இந்தியா ஏ அணியில் பண்டியா இடம் பெறாதது பற்றி கூறுகையில், "அதற்கு காரணம், அவர் உடற்தகுதியுடன் இல்லை என்பதோ, சோதனையில் தோல்வி அடைந்தார் என்பதோ இல்லை. நான் அவரை தடுக்க காரணம் அவரது பந்துவீச்சு தான். அது இன்னும் முன்னேற வேண்டும். சர்வதேச அளவில் பந்துவீச்சில் ஏற்படும் பணிச்சுமை தான் காரணம்" என்றார்.

பிசிசிஐக்கு தகவல்
ஹர்திக் பண்டியா தயார்நிலை குறித்து அனைத்து தகவல்களையும் ரஜினிகாந்த், பிசிசிஐ மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அனுப்பி உள்ளதாக தெரிகிறது. அதன் அடிப்படையிலேயே அவர்கள் அவரை இந்தியா ஏ அணியில் சேர்க்கவில்லை என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











