மீண்டும் மீண்டுமா? ஹர்திக் பாண்டியாவுக்கு காயம்.. ஆஸி ஏ, நியூசிலாந்து தொடரிலிருந்து விலக வாய்ப்பு
மும்பை: இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, ஐபிஎல் 2026 தொடருக்கு பிறகு எந்தவொரு போட்டி கிரிக்கெட்டிலும் விளையாடாத நிலையில், அடுத்த மாதம் நடைபெறவுள்ள இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலிருந்தும் விலக உள்ளார்.
அடுத்த மாதம் புதுச்சேரியில் இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகள் மூன்று 50 ஓவர் போட்டிகளில் மோதவுள்ளன. இந்தத் தொடருக்கான இந்திய ஏ அணியில் ஹர்திக் பாண்டியாவை பிசிசிஐ தேர்வு குழுவினர் சேர்த்திருந்தனர்.

இருப்பினும், சமீபத்திய தகவல்களின்படி, இந்த வார தொடக்கத்தில் ஹர்திக் பாண்டியாவிற்கு வலது காலின் கணுக்கால் பகுதிக்கு மேல் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் புதிய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பிசிசிஐ மருத்துவக் குழு அவரது நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதோடு, அவருக்கு ஓய்வெடுக்கவும் அறிவுறுத்தியுள்ளது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான தொடரில் அவர் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது.
அடுத்த 10 முதல் 15 நாட்களுக்கு அவர் எந்தவொரு உடற்பயிற்சிகளிலும் ஈடுபட வாய்ப்பில்லை என்றும், இதனால் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் பங்கேற்பதும் தற்போது சந்தேகத்திற்கு இடமாகியுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய கிரிக்கெட் அணி அக்டோபர் மாதத்தில் ஐந்து டி20 போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்து செல்லவுள்ளது.அக்டோபர் 22-ஆம் தேதி தொடங்கவுள்ள டி20 தொடரை பாண்டியா தவறவிடுவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளன.
அவர் குணமடைந்த பின், ஒருநாள் தொடருக்கு மட்டுமே தேர்வு செய்யப்படலாம் எனத் தெரிகிறது. வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இந்தியாவின் முக்கிய வீரராக இருக்கும் பாண்டியா, 2027 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக்கும் முக்கியமானவர் என்பதால், அவரது கம்பேக்கை அவசரப்படுத்த பிசிசிஐ தேர்வு குழுவினர் விரும்பவில்லை.
ஹர்திக் பாண்டியாவின் காயம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் சில நாட்களில் பிசிசிஐ வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான இந்திய ஏ அணியில் அவருக்குப் பதிலாக மும்பை ஆல்-ரவுண்டர் சூர்யான்ஷ் ஷெட்கே சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடும் ஷெட்கே, இதுவரை இந்தியாவிற்காக மூன்று டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications


