"நிரூபிக்க வேண்டிய நேரம்".. தட்டிக் கொடுத்த டிராவிட் - சீறும் சிங்கமாய் சிலிர்த்தெழும் பாண்ட்யா
கொழும்பு: டிராவிட் ஒரு அற்புதமான பேட்ஸ்மேன் மட்டுமல்ல. உன்னதமான நல்ல மனிதரும் கூட. அவரது வார்த்தைகளை காது கொடுத்து கேட்டால் போதும், தூங்கும் போதும் சாதிக்கலாம்.
Recommended Video
இலங்கை சென்றிருக்கும் இந்திய 'ஏ' அணிக்கு ராகுல் டிராவிட் தான் கோச். அதாவது தலைமை பயிற்சியாளர். இந்திய அணியின் ரெகுலர் கோச் ரவி சாஸ்திரி, இங்கிலாந்து சென்றிருக்கும் இந்திய அணியுடன் இருப்பதால், 'ஏ' அணியை வழிநடத்த தேர்வு செய்யப்பட்டார்.
அவர் செலக்ட் ஆனதில் இருந்தே, சிலருக்கு எரிச்சல்.. பலருக்கு பெரும் மகிழ்ச்சி. குறிப்பாக டிராவிட்டை நன்கு அறிந்த நபர்கள், அவரது தேர்வை ரசித்தனர். கொண்டாடினர். காரணம் அவர் அணிக்கு அவ்வளவு முக்கியமானவர்.

டிராவிட் பயிற்சி
மொத்தம் 20 பேர் கொண்ட வீரர்களை தேர்வு செய்து இலங்கைக்கு அனுப்பியது பிசிசிஐ. அதில் பெரும்பாலானோர் இளம் வீரர்கள். பலர் டிராவிட் பயிற்சி கொடுத்த அண்டர்-19 அணிக்காக விளையாடியவர்கள். அப்படிப்பட்ட வீரர்களுக்கு தெரியும் டிராவிட்டின் பயிற்சி எப்படி இருக்கும் என்றும். அதற்கு ஒரு சின்ன சாம்பிள் தான் இது.

அதுதான் மதிப்பு
இங்கிலாந்து செல்லவிருந்த இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா தேர்வு செய்யப்படாதது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. காரணம், நீண்ட நாட்களாக முதுகு வலியால் அவஸ்தைப்பட்டு வந்த பாண்ட்யா, தீவிர சிகிச்சைக்கு பிறகு மெல்ல மெல்ல குணமடைந்தார். ஆனால், அவரால் பழையபடி பந்து வீச முடியவில்லை. பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தினார். பாண்ட்யா ஆல் ரவுண்டர் என்பதால் தான் அவருக்கு மதிப்பு. அதை அவர் இழந்த உடனேயே, இங்கிலாந்து போன்ற ஃபாஸ்ட் ஆல் ரவுண்டர் தேவைப்படும் ஆடுகளங்களுக்கு அவர் ஒர்த் இல்லை என்று அவரை புறக்கணித்து, ஷர்துல் தாகூரை இங்கிலாந்து அனுப்பியது பிசிசிஐ. இதில் நியாயமும் இருக்கவே செய்கிறது.

அதிலும் ஏமாற்றம்
இந்த நிலையில் தான் அவர் இலங்கை டூருக்காக இந்திய 'ஏ' அணியில் தேர்வு செய்யப்பட்டார். இதனால் அவரே அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தவானை கேப்டனாக்கியது பிசிசிஐ. சரி.. துணை கேப்டன் பதவியாவது கிடைக்குமே என்று எதிர்பார்த்தால், அதுவும் புவனேஷ் குமாருக்கு கொடுக்கப்பட்டது.

ஹிட்டர்களுக்கா பஞ்சம்?
இந்த சூழலில் தான், பாண்ட்யா ஒருவேளை அணியில் இருந்து ஒதுக்கப்படுகிறாரோ அல்லது அவருக்கான முக்கியத்துவம் குறைக்கப்படுகிறது என்ற ஐயம் எழுந்தது. காரணம், ஆல் ரவுண்டர் என்ற தகுதியை நீக்கிவிட்டு பார்த்தால், அவரது அடையாளம் 'பெரிய ஹிட்டர்' என்பது மட்டுமே. ஆனால், இங்கு சிக்ஸர்களை பறக்கவிடும் ஹிட்டர்களுக்கு பஞ்சமே கிடையாது. இந்த நிலையில் தான், டிராவிட் பாண்ட்யாவிடம் நிறைய விஷயங்களை பேசியிருப்பதாக தெரிகிறது.

நிச்சயம் பந்து வீசுவார்
குறிப்பாக, பாண்ட்யாவிடம் அவரது ஆல் ரவுண்டர் திறனை மீண்டும் வெளிக்கொண்டு வர டிராவிட் கடும் முயற்சி மேற்கொண்டிருப்பதாக தெரிகிறது. Pysically, Mentally என இரு விதத்திலும் அவர் பாண்ட்யாவை மோல்ட் செய்திருப்பதாக கூறப்படுகிறது. முதுகுவலிக்கு ஏற்ப அவரது பந்துவீச்சில் சில பல மாற்றங்களை டிராவிட் ஏற்படுத்தி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், அவர் இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் நிச்சயம் பந்துவீசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications