"ஹர்திக் பாண்டியாவுக்கு இணையாக இவரை சொல்வதா? அதெல்லாம் இல்லை".. மோஹித் சர்மா ஓபன் டாக்
மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இளம் ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி சேர்க்கப்பட்டுள்ளார். இதற்காக 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான அணியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் சிறப்பாக பந்துவீசி விக்கெட்களை வீழ்த்தி இருந்தார் நிதிஷ் குமார். இதை அடுத்து காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து விலகி உள்ள ஹர்திக் பாண்டியாவுக்கு சரியான மாற்றாக நிதிஷ் குமார் ரெட்டி விளங்குவார் என்ற பேச்சு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
ஆனால், இந்த ஒப்பீட்டை முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் மோஹித் சர்மா மறுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "ஹர்திக் பாண்டியாவுடன் நிதிஷ் குமார் ரெட்டியை ஒப்பிடுவது முற்றிலும் தவறானது. தற்போதைய சூழலில் ஹர்திக் பாண்டியாவுக்கு நிதிஷ் எவ்விதத்திலும் இணையாக முடியாது. இப்படித் தேவையின்றி ஒப்பிடுவதால் நிதிஷ் ரெட்டி மீதான எதிர்பார்ப்பு அளவுக்கு அதிகமாக எகிறிவிடும்.

ஹர்திக் பாண்டியா களமிறங்கும் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து ஆட்டத்தின் போக்கை மாற்றும் அசாத்திய திறமை கொண்டவர். ஆனால் நிதிஷ் ரெட்டி அப்படிப்பட்ட ஆட்டக்காரர் அல்ல. அவர் களத்தில் சிறிது நேரம் நிலைத்து நின்று பந்துகளை எதிர்கொண்ட பிறகே தனது அதிரடியைத் தொடங்குவார்.
எனவே அவரிடம் இருந்து ஹர்திக் பாண்டியாவின் ஆட்டத்தை எதிர்பார்ப்பது நியாயமல்ல. அவரது தனிப்பட்ட திறமைக்கு ஏற்பவே அவரை நாம் பயன்படுத்த வேண்டும். சர்வதேச அரங்கில் எதிரணியை மிரட்டும் அளவுக்கு தனது பந்துவீச்சுத் திறனையும் நிதிஷ் ரெட்டி இன்னும் மெருகேற்ற வேண்டியுள்ளது. எனவே அவர் மீது அதிக சுமையை ஏற்றாமல் நிதானமாக வாய்ப்பளிக்க வேண்டும்" என்று மோஹித் சர்மா தெரிவித்தார்.
2027 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடருக்கான அணியில் இடம் பெறும் வீரர்களை அடையாளம் காணும் பணியில் பிசிசிஐ இறங்கி உள்ளது. இந்த நிலையில் வேகப் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு இணையான மாற்று வீரராக வேறு யாரும் இல்லாததால் நிதிஷ் குமார் ரெட்டிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications

