டெல்லி: இங்கிலாந்தில் நடந்து வரும் பெண்கள் கியா சூப்பர் லீக் டி-20 போட்டியில் இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர் அடித்த சிக்சரால், மைதானத்தில் இருந்த வேனின் கண்ணாடி உடைந்தது.
இந்திய பெண்கள் டி-20 அணியின் கேப்டனான ஹர்மன்பிரீத் கவுர், இங்கிலாந்தின் லான்காஷையர் தண்டர் அணிக்காக விளையாடி வருகிறார்.

அங்கு நடந்து வரும் கியா சூப்பர் லீக் போட்டிகளில் யார்க்ஷையர் டைமண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 44 பந்துகளில் 74 ரன்கள் அடித்து தூள் கிளப்பினார் ஹர்மன்பிரீத் கவுர்.
இந்தப் போட்டியில் கவுர் 6 சிக்சர்கள் அடித்தார். அதில் இரண்டு சிக்சர்கள் வரலாற்றில் இடம்பிடித்துள்ளன. அவர் அடித்த ஒரு சிக்சர், மைதானத்தில் நிறுத்தப்பட்டிருந்த வேனின் கண்ணாடியை பதம் பார்த்தது.
மற்றொரு சிக்சர் மைதானத்தில் இருந்த நிருபருக்கு அருகில் பறந்து சென்றது. அந்த நிருபர் பின்பக்கமாக திரும்பியிருந்தார். அப்போது கவுர் அடித்த பந்து, அவருக்கு மிகவும் நெருக்கமாக பறந்து சென்று விழுந்துள்ளது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். சற்று தள்ளி வந்திருந்தால், வேன் கண்ணாடியின் நிலைதான் அவருக்கும் ஏற்பட்டிருக்கும்.
இந்த இரண்டு சிக்சர்களும் அடிக்கப்பட்ட வேகம், அது பறந்த சென்ற வேகத்தால் மற்ற வீராங்கனைகளும் மிரண்டு போயினர்.