Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத்தை சீண்டிய வங்கதேச கேப்டன் நிகார் சுல்தானா.. புகாரை திசை திருப்ப முயற்சி?

தாகா: வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் நிகார் சுல்தானா ஜோதி சக வீராங்கனைகளைத் தாக்கியதாகத் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குக் பதில் கூறும்போது சமீபத்தில் ஒருநாள் போட்டி உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கௌரின் பெயரைப் பயன்படுத்தி அவர் பேசியிருப்பது, கிரிக்கெட் உலகில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2023-ல் இந்திய அணி வங்கதேசத்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, ஆட்டமிழந்த ஆத்திரத்தில் இந்தியக் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் தனது பேட்டால் ஸ்டம்ப்பை அடித்து நொறுக்கினார். பின்னர், போட்டி நடுவர்களின் தீர்ப்பை "மோசமானது" என்று விமர்சித்ததுடன், கோப்பையுடன் புகைப்படம் எடுக்கும்போதும் வங்கதேச வீராங்கனைகளைச் சீண்டினார். இந்தச் சம்பவத்தை நினைவுபடுத்தும் விதமாக நிகார் சுல்தானா பேசியுள்ளார்.

Harmanpreet Kaur Controversy Bangladesh Captain Nigar Sultana Responds to Charges from Junior players

ஆனால், வங்கதேச மகளிர் அணியின் உள்விவகாரத்தில் விளக்கம் அளிக்கும் போது தேவையே இல்லாமல் இந்திய மகளிர் அணி கேப்டன் பெயரை பயன்படுத்தி தன் மீதான குற்றச்சாட்டுக்களை திசைதிருப்பி விட முயற்சித்து இருக்கிறார் வங்கதேச மகளிர் அணி கேப்டன்.

வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் ஜஹானாரா ஆலம், கேப்டன் நிகார் சுல்தானா ஜூனியர் வீராங்கனைகளிடம் தவறாக அச்சுறுத்தி நடந்துகொண்டதாகவும், அவர்களை அடித்ததாகவும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தார். இது வங்கதேச கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த நிகார் சுல்தானா, "நான் ஏன் ஒருவரை அடிக்க வேண்டும்? நான் ஏன் ஸ்டம்ப்பை என் பேட்டால் தாக்க வேண்டும்? அப்படி ஸ்டம்ப்பை அடித்து நொறுக்குவதற்கு நான் என்ன ஹர்மன்பிரீத் கௌரா? நான் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? எனது தனிப்பட்ட இடத்தில், நான் பயிற்சி செய்யும் போது கோபம் வந்தால் எனது பேட்டைத் தட்டலாம், ஹெல்மெட்டை அடிக்கலாம் - அது என் சொந்த விஷயம்" என்று டெய்லி கிரிக்கெட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் அவர், "நான் ஏன் இன்னொருவர் மீது கை வைக்க வேண்டும்? யாரோ ஒருவர் சொன்னார் என்பதற்காக நான் ஒருவரைத் தாக்குவேனா? நான் அப்படிச் செய்தேனா என்பதை மற்ற வீராங்கனைகளிடமோ அல்லது வேறு யாரிடமோ நீங்கள் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்" என்றும் அவர் ஆவேசமாகப் பதிலளித்துள்ளார்.

ஜஹானாரா ஆலம் வைத்த குற்றச்சாட்டு

சமீபத்தில் நடந்து முடிந்த 2025 மகளிர் உலகக் கோப்பையில் நிகார் சுல்தானா வங்கதேச அணியை வழிநடத்தினார். அந்தத் தொடரில், நவி மும்பையில் உள்ள டாக்டர் டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. வங்கதேச அணி, பாகிஸ்தானுக்கு எதிராக ஒரேயொரு வெற்றியை மட்டுமே பதிவு செய்தது.

தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஜஹானாரா ஆலம், "ஒரு ஜூனியர் வீராங்கனையை அழைத்து நிகார் அறைந்தார். உலகக் கோப்பையின்போது இது நடந்தது" என்று அதிர்ச்சி குற்றச்சாட்டை முன்வைத்தார். "ஜூனியர் வீராங்கனைகள் தன்னைத் தொலைபேசியில் அழைத்து, 'தயவுசெய்து எங்களைக் காப்பாற்றுங்கள், ஜோதி அக்கா எங்களை அடித்துத் துன்புறுத்துகிறார்' என்று கூறியதாக" ஜஹானாரா தெரிவித்திருந்தார்.

நிர்வாகத்தை கேள்விக்குள்ளாக்கிய நிகார்

ஜஹானாராவின் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்த நிகார் சுல்தானா, "நான் அப்படிப்பட்ட பெண் அல்ல. ஆஸ்திரேலியாவில் இருக்கும் தன்னை ஜூனியர் வீராங்கனைகள் அழைத்துக் கூறியதாக ஜஹானாரா அக்கா சொல்வதைக் கேட்டேன். நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன்: கடந்த ஆறு அல்லது ஏழு ஆண்டுகளாக அணியில் இல்லாத, ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுவிட்ட ஒருவரிடம் ஏன் புகார் அளிக்க வேண்டும்?" என்று கேள்வி எழுப்பினார்.

"நான் உண்மையிலேயே ஒருவரை அடித்திருந்தால் அல்லது துன்புறுத்தியிருந்தால், அதைக் கேட்பதற்கு அணி நிர்வாகம், மேலாளர், பயிற்சியாளர்கள் என யாருமே இல்லையா? நான்தான் இங்கு இறுதி அதிகாரம் படைத்தவளா? அந்த வீராங்கனைக்கு ஒரு பிரச்சனை என்றால், ஆஸ்திரேலியாவில் இருக்கும் ஜஹானாரா அக்காவை அழைப்பாரா? அல்லது இங்குள்ள யாரிடமாவது பகிர்ந்துகொள்வாரா?" என்று நிகார் சுல்தானா தனது தரப்பு வாதத்தை முன்வைத்தார்.

ஒரு மூத்த வீராங்கனை கேப்டன் மீது வைத்துள்ள இந்தக் கடுமையான குற்றச்சாட்டும், அதற்கு கேப்டன் அளித்துள்ள பதிலடியும் வங்கதேச மகளிர் கிரிக்கெட்டில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. ஆனால், இதில் எதற்காக ஹர்மன்பிரீத் கவுர் பெயரை பயன்படுத்த வேண்டும்? என்ற கேள்வியும் எழுகிறது. ஜூனியர் வீராங்கனைகளின் குற்றச்சாட்டு குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, November 18, 2025, 11:29 [IST]
Other articles published on Nov 18, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+