கிரிக்கெட் வீராங்கனையுடன் விளையாடும் ரயில்வே….
டெல்லி: மைதானத்தில் எதிரணியின் சவால்களை சமாளித்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை, ஹர்மன்பிரீத் கவுர், அரசின் சட்ட விதிகளை எதிர்கொள்ள முடியாமல் திணறுகிறார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, கடந்தாண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியின் பைனல் வரை முன்னேறியது. இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த ஆட்டத்தில், 171 ரன்கள் குவித்த ஹர்மன்பிரீத் கவுர், பலருடைய பாராட்டுகளையும் பெற்றார்.

அவருடைய சாதனையைப் பாராட்டும் வகையில், டிஎஸ்பி பதவி வழங்குவதாக பஞ்சாப் அரசு அறிவித்தது. மேற்கு ரயில்வேயில் பணியாற்றி வந்த கவுர், அந்தப் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால், அவர் பணியில் இருந்து விடுவிக்கப்படவில்லை.
விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் மேற்கு ரயில்வேயில் அலுவலக கண்காணிப்பாளர் பதவியில் கவுர் சேர்ந்தார். ஐந்து ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி, 5 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்து விலகினால், ஐந்தாண்டுகளுக்கான சம்பளத்தை முழுமையாக செலுத்த வேண்டும்.
ஐந்து மாதங்களுக்கு முன்பு ஹர்மன்பிரீத் ராஜினாமா செய்துள்ளார். அவர், ரூ. 27 லட்சத்தை செலுத்தினால், பணியில் இருந்து விடுவிப்பதாக மேற்கு ரயில்வே கூறியுள்ளது.
கடந்த ஐந்து மாதங்களாக சம்பளம் கிடைக்காமல், பஞ்சாப் போலீஸில் டிஎஸ்பியாக பதவியேற்க முடியாத நிலையில் கவுர் உள்ளார். அவரை பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சருக்கு பஞ்சாப் முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத நிலையில் சிக்கியுள்ளார் ஹர்மன்பிரீத் கவுர். நல்ல செய்தி வருமா என்று தினமும் காத்திருக்கிறார். ரயில்வே மனமிறங்குமா.
Story first published: Saturday, January 20, 2018, 17:37 [IST]
Other articles published on Jan 20, 2018


Click it and Unblock the Notifications