மும்பை : விராட் கோலி - அனுஷ்கா சர்மாவின் குடும்ப விவகாரம் தொடர்பாக குறித்து தொழிலதிபர் ஹர்ஷ் கொயங்கா பதிவிட்டுள்ள கருத்து ரசிகர்களிடையே கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்தும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி விலகுவதாக அறிவிக்கப்பட்டது. ஐதராபாத் மைதானத்தில் தொடங்கவிருந்த போட்டிக்கு 2 நாட்கள் முன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்த விராட் கோலி, திடீரென சொந்த காரணங்கள் காரணமாக முதல் 2 போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் ரசிகர்கள் பலரும் விராட் கோலியின் விலகலுக்கான காரணம் புரியாமல் குழம்பினர்.

இதனை தொடர்ந்து மீதமுள்ள 3 போட்டிகளிலும் விராட் கோலி விளையாட மாட்டார் என்று பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்டது. விராட் கோலியின் 15 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில் ஒட்டுமொத்த டெஸ்ட் தொடரிலும் விளையாடாமல் இருப்பது இதுவே முதல்முறையாகும். இதனால் பலரும் விராட் கோலி நல்ல மனநிலையுடன் கம்பேக் கொடுக்க வேண்டும் என்று வாழ்த்து கூறி வந்தனர். அண்மையில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, 15 ஆண்டுகளாக இந்திய அணிக்காக ஆடி வரும் விராட் கோலி, விடுமுறை எடுக்க அனைத்து உரிமைகளும் உள்ளது என்று ஆதரவாக பேசினார்.

இருப்பினும் விராட் கோலி என்ன காரணத்திற்காக விடுப்பில் இருக்கிறார் என்பது மட்டும் வெளியிடப்படவில்லை. இதனிடையே விராட் கோலியின் நெருங்கிய நண்பரான டி வில்லியர்ஸ், விராட் கோலி - அனுஷ்கா தம்பதியினர் 2வது குழந்தையை எதிர்பார்த்துள்ளனர் என்று கூறினார். பின்னர் விராட் கோலி குறித்து தவறான தகவலை வெளியிட்டதாக விராட் கோலி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோரினார். அதேபோல் விராட் கோலி விவகாரத்தில் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறி பல்டி அடித்தார்.
இந்த நிலையில் தொழிலதிபரும், புனே வாரியர்ஸ் அணியின் உரிமையாளரான ஹர்ஷ் கொயங்கா விராட் கோலி குறித்து மறைமுகமாக ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், அடுத்த சில நாட்களில் குழந்தை ஒன்று புதிதாக பிறக்கவுள்ளது. அந்த குழந்தை கிரிக்கெட் விளையாடி வரும் அவரின் தந்தையை போல் இந்தியாவை அடுத்த உயரத்திற்கும் எடுத்து செல்லலாம். அல்லது தாயை பின்பற்றி சினிமா நட்சத்திரமாகவும் வரலாம் என்று பதிவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் லண்டன் அந்த குழந்தை பிறக்கவுள்ளதாக கூறியுள்ளார்.
ஹர்ஷ் கொயங்காவின் இந்த கருத்துக்கு ரசிகர்கள் பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். குழந்தைக்கு எப்படி வளர விருப்பமோ, அதன்படி விட்டுவிடலாம், உங்களின் எண்ணத்தை பிறப்பதற்கு முன்பே திணிக்காதீர்கள் என்று பதிலடி கொடுத்துள்ளனர். அதேபோல் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கு விராட் கோலி திடீரென லண்டன் சென்று திரும்பினார். தற்போது லண்டனில் இருப்பதாக தகவல் வெளியாகிய நிலையில், 2வது குழந்தை பிறப்பிற்காக லண்டனில் விராட் கோலி குடும்பத்தினர் தங்கியிருப்பதாக பார்க்கப்படுகிறது.